மேட்டூர் நீர் வெளியேற்றம் குறைப்பு

மேட்டூர்/தருமபுரி:அக்.6-மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான தண்ணீர்திறப்பு விநாடிக்கு 4,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்இருப்பைப் பொறுத்து, காவிரிடெல்டா பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டில் அணையில் போதுமான அளவு தண்ணீர் இருந்ததால், கடந்த ஜூன் 12-ம் தேதி முதல்வர்ஸ்டாலின் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவைத்தார்.பாசனத்தின் தேவைக்கேற்பதண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது. கடந்த ஆகஸ்ட் 27-ம்தேதி வரை விநாடிக்கு 8 ஆயிரம்கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. செப்டம்பர் 6-ம் தேதி விநாடிக்கு 6,500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
தற்போது, மேட்டூர் அணைக்குநீர்வரத்து சரியத் தொடங்கியுள்ளதால், நீர்மட்டமும், நீர்இருப்பும் மிகக் குறைவாக உள்ளது.
அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 1,514 கனஅடியாக நீர்வரத்து இருந்த நிலையில் நேற்று காலை 1,004 கனஅடியாக சரிந்தது.
நேற்று காலை முதல் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் விநாடிக்கு 6,500 கனஅடியில் இருந்து, 4 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 33.58 அடியாகவும், நீர் இருப்பு 9.02 டிஎம்சியாகவும் இருந்தது.
ஒகேனக்கல்லில் 3,000 கனஅடி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 1-ம்தேதி விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து பதிவானது. ஆனால், 2-ம் தேதி காலை அளவீட்டின்போது விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்திருந்தது.
அன்று முதல் 4-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களாக விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாகவே நீர்வரத்து பதிவாகி வந்தது. இந்நிலையில், நேற்று காலை அளவீட்டின்போது விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது.