மேனகா காந்திக்கு ஆதரவாக மகன் வருண் பிரச்சாரம்

புதுடெல்லி:மே. 24 – பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்திக்கு சுல்தான்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியது. அதேவேளையில் மேனகாவின் மகனும் பிலிபித் எம்.பி.யான வருண் காந்திக்கு இத்தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளிக்கவில்லை.இதனால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் வருண் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் சுல்தான்பூர் தொகுதியில் தேர்தல் பிரச்சார கடைசி நாளான நேற்று தனது தாய் மேனகாவுக்கு ஆதரவாக வருண் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் பாஜகவின் பெயரை குறிப்பிடாமல் வருண் பேசுகையில், “எனது அம்மாவுக்காக பிரச்சாரம் செய்யவே இங்கு வந்துள்ளேன்.
எனது தந்தை சஞ்சய் காந்தி இங்கிருந்து போட்டியிட்டார், இப்போது என் அம்மா இங்கிருந்து வாக்கு கேட்கிறார். எனவே சுல்தான்பூர் எனது தாய்மண். சுல்தான்பூர் மண்ணில் எனது தந்தையின் வாசம் உள்ளது. இங்கு ஒவ்வொருவரும் எனது தாயை மாதாஜி என்றே அழைக்கின்றனர்” என்றார்.
சுல்தான்பூரில் மேனகா இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். 2019-க்கு முன் இத்தொகுதி எம்.பி.யாக வருண் காந்தி இருந்தார். சுல்தான்பூரில் மேனகா காந்திக்கு எதிராக சமாஜ்வாதி சார்பில் ராம் புவால் நிஷாத்தும் பகுஜன் சமாஜ் சார்பில் உத்ராஜ் வர்மாவும் போட்டியிடுகின்றனர்.
பாஜக முக்கிய தலைவர்களில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மட்டுமே சுல்தான்பூரில் பிரச்சாரம் செய்துள்ளார். இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க ராகுல் காந்தியும் பிரியங்காவும் உ.பி.க்கு பலமுறை வந்த போதும் சுல்தான்பூருக்கு செல்லவில்லை. கடந்த தேர்தலில் மேனகா 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை இதைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என மேனகா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.