மேயர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு

திருநெல்வேலி: ஜன 12-
திருநெல்வேலி மாநகராட்சி மேயர்மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், திமுக கவுன்சிலர்கள் விருதுநகருக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 38 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். இதன் மீதான வாக்கெடுப்பு ஜன.12-ம் தேதி (இன்று) நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் தாக்கரே அறிவித்துள்ளனர். இதற்கிடையில், திமுக கவுன்சிலர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஈடுபட்டார்.
தமிழக முதல்வரால் நியமிக்கப்பட்டுள்ள மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும். வாக்கெடுப்பில் யாரும்கலந்துகொள்ளக் கூடாது’ என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சரின் சமரசத்தை திமுக கவுன்சிலர்கள் ஏற்றுக்கொண்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், “அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் விருதுநகரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே,கூடுதல் உடைகளை எடுத்துக்கொண்டு அப்துல்வகாப் எம்எல்ஏவின் அலுவலகத்துக்கு வாருங்கள்” என திமுக கவுன்சிலர்கள் 20 பேருக்கு தொலைபேசியில் நேற்று அழைப்புகள் வந்தன.
இதையடுத்து, மண்டலத் தலைவர்கள் மகேஸ்வரி (திருநெல்வேலி), ரேவதி (தச்சநல்லூர்), இக்லாம்பாசிலா (மேலப்பாளையம்) மற்றும் கவுன்சிலர்கள் சிலர்நேற்று காலை எம்எல்ஏ அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்து விருதுநகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.