மேற்கு நாடுகளில் ஆயுத கிடங்குகள் அழிப்பு ரஷ்யா தகவல்

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் இருந்த கிடங்கை தாக்கி அழித்துவிட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது. உக்ரைனில் போர் நடந்து வரும் கிழக்கத்திய நகரான சிவிரோடொனெட்ஸ்க்கிற்கு செல்ல கூடிய அனைத்து பாலங்களும் ரஷிய படைகளின் ஆக்ரோஷ தாக்குதலில் அழிக்கப்பட்டு விட்டன. இதனை கவர்னர் செர்ஹி கைடாய் சமூக ஊடகம் வழியே வெளியிட்டு உள்ள செய்தியில் உறுதிப்படுத்தி உள்ளார். நகரை முழு கட்டுப்பாட்டுக்குள் ரஷியா இன்னும் எடுத்து கொள்ளவில்லை. அதன் ஒரு பகுதி இன்னும் உக்ரைன் கட்டுக்குள்ளேயே உள்ளது என அவர் கூறியுள்ளார். எனினும், நகரின் 70 சதவீதத்திற்கும் கூடுதலான பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. இந்நிலையில், பின்லாந்து அதிபர் சாவ்லி நீனிஸ்டோ கூறும்போது, உக்ரைன் மற்றும் ரஷியா என இரு நாடுகளும் போரில் சக்தி வாய்ந்த ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றன. அதிலும், உக்ரைனுக்கு எதிரான போரில் பேரழிவுகளை ஏற்படுத்த கூடிய தெர்மோபேரிக் குண்டுகள், கிளஸ்டர் வெடிகுண்டுகளை ரஷியா பயன்படுத்தி வருகிறது என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக உக்ரேனிய மக்களுக்கு தனது தினசரி உரையில் பேசிய உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷியப் படைகள் மூலோபாய கிழக்கு நகரத்தை கைப்பற்றி வருவதால், செவிரோடொனெட்ஸ்க்கான போர் “பயங்கரமான” பலி எண்ணிக்கையை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்தப் போரின் காரணமாக மனித செலவு எங்களுக்கு மிகவும் அதிகம் என்றும் டான்பாசுக்கான போர் சந்தேகத்திற்கு இடமின்றி ஐரோப்பாவின் ராணுவ வரலாற்றில் மிகவும் வன்முறையான போர்களில் ஒன்றாக நினைவுகூரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உக்ரைன் போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வரும் நிலையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் மற்றும் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ஆகியோர் வருகிற 16-ந்தேதி உக்ரைன் தலைநகர் கீவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 3 ஐரோப்பிய தலைவர்களும் ஜெலென்ஸ்கியை நேரில் சந்தித்து உக்ரைன் துறைமுகங்களில் கண்ணிவெடி அகற்றுதல் மற்றும் தானியங்களை இறக்குமதி செய்வது குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.