மேற்கு வங்க பெயரைக் கெடுக்கும் பிஜேபி மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: டிச. 18: ‘மேற்கு வங்கத்தின் பெயரை கெடுப்பதே பாஜவின் வேலையாக இருக்கிறது’ என டெல்லி புறப்படும் முன்பாக கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 100 நாள் வேலை திட்டம், ஜிஎஸ்டி நிலுவை உள்ளிட்ட பல்வேறு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிட டெல்லிக்கு செல்கிறார். அதற்கு முன்னதாக கொல்கத்தா விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு விதிமீறல் தீவிரமான பிரச்னை. இது ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு தோல்வி. அதை ஒன்றிய உள்துறை அமைச்சரும் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளார். அதைப் பற்றி அவர்கள் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கைதான முக்கிய குற்றவாளிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது மேற்கு வங்கத்தை கேவலப்படுத்தும் பாஜவின் தந்திரம். மேற்கு வங்கத்தின் பெயரை கெடுப்பதே பாஜவின் வேலையாக இருக்கிறது.
இது போன்ற எந்த சட்டவிரோத செயல்களையும் எங்கள் அரசு ஆதரிக்காது. டெல்லியில் வரும் 19ம் தேதி நடக்கும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன்.

அதைத் தொடர்ந்து 20ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து மாநிலத்திற்கான நிலுவைத் தொகையை கோருவேன். அது ஒன்றிய அரசின் பணம் மட்டுமல்ல. மேலும் சுகாதார மையங்களுக்கு காவி நிறம் பூச வேண்டுமென்ற ஒன்றிய அரசின் உத்தரவு குறித்தும் பிரதமர் மோடியிடம் முறையிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.