மேலும் 16 நாட்கள் வினாடிக்கு 3000 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவு

புதுடெல்லி:அக். 12- காவிரியில் இருந்து மேலும் 16 நாட்கள் வினாடிக்கு 3000 கனஅடி என்ற வீதம் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய ஒழுங்காற்று குழுவின் 88வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாட்டின் தரப்பில் காவிரி தொழில்நுட்ப தலைவர் சுப்ரமணியன், தலைமை பொறியாளர் சுப்ரமணியன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலக அலுவலகத்தில் இருந்து பங்கேற்றனர்.
நேற்றைய கூட்டத்தின் போது தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தியதில்,‘‘தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் கடந்த 40ஆண்டுகளில் இல்லாத நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து போதுமான தண்ணீர் இல்லாததால் முன் கூட்டியே மூடப்பட்டுள்ளது ’’ என்று தெரிவித்தனர். இதற்கு கர்நாடகா அரசு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா, ‘‘காவிரியில் இருந்து மேலும் 16 நாட்களுக்கு அதாவது, அக்டோபர் 16ம் தேதி காலை எட்டு மணி முதல் 31ம் தேதி வரையில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3000 கன அடி என்ற வீதம் கர்நாடகா அரசு தண்ணீரை திறந்து விட வேண்டும்’’ என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.