மே மாதத்திற்குள் 110 கிராமங்களுக்கு காவேரி குடிநீர்

பெங்களூர், பிப், 7-
பெங்களூர் குடிநீர் வழங்கல் வாரியம் என்ற பி. டபிள்யு‌. எஸ். எஸ். பி. மே மாதத்திற்குள் 110 கிராமங்களுக்கு காவிரி நீர் வழங்குவதாக உறுதி அளித்த போதிலும், இதனை பொதுமக்கள் நம்பவும் தயாராக இல்லை. இணைப்பு பெறவும் பலருக்கு விருப்பமில்லை என தெரியவந்துள்ளது. சிலர் இதன் இணைப்பைப் பெற கடந்த 2019 ல் பணம் செலுத்தினார்கள். ஆனால் பலர் உறுதியற்றவர்களாகவே உள்ளனர். இங்கு 3.5 லட்சம் பேர் உள்ளதில்1.5 லட்சம் பேர் மட்டுமே குடிநீர் வினியோகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைத்து பகுதிகளிலும் இன்னும் அறிவிக்கப்படாததால், அவசர அவசரமாக இணைப்பை பெறுவதற்கு இது மிக விரைவில் கிடைக்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், காவிரி நீர் கிடைக்கும் என முழுமையாக அப்பகுதியினர் நம்பத் தயாராக இல்லை.
சுமார் 60 கிராமங்களில் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை தண்ணீர் வழங்கி வருகிறோம். இன்னும் கூட மக்கள் குடிநீர் இணைப்பு பெற தயாராக இல்லை.இனி தொடர்ந்து சப்ளை செய்வார்கள் என்ற மூத்த அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். எல்லோருக்கும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை டெபாசிட் செலுத்த முடியாது. எனவே அவர்கள் கால அவகாசம் கேட்டு வருகிறார்கள். பெங்களூர் குடிநீர் வழங்கல் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் கூறுகையில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் விண்ணப்பிக்க வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இப்பணிகள் எல்லாம் முடிந்த பிறகு அனைவருக்கும் குடிநீர் கிடைக்கும். அப்போது தான் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். குடிநீருக்காக 2019ல் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்தியவர்கள் இன்னும் குடிநீர் கிடைக்காததால் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.காலகெடுவுக்குள் முடிக்காமல் தவறவிட்டதால் இதன் பேரில் அவர்களுக்கு உரிய நம்பிக்கை இல்லை. தற்போது நடந்து வரும் மேம்பாட்டு பணிகளில் முன்னேற்றம் குறித்து, வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்