மே.வங்க அரசின் கருத்தை கேட்காதது ஏன்? மோடிக்கு மம்தா கடிதம்

கொல்கத்தா: ஜூன் 25 வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தார். இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசினார்.அப்போது, 1996-ல் மேற்கொள்ளப்பட்ட கங்கை நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது மற்றும் தீஸ்தா நதியை பாதுகாப்பது மற்றும் நிர்வகிப்பது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “தீஸ்தா நதியை பாதுகாப்பது குறித்து ஆலோசிக்க தொழில்நுட்ப நிபுணர் குழு வங்கதேசம் செல்லும்” என்றார்.மம்தா பானர்ஜிஒப்பந்தத்தின்படி, தீஸ்தா நதி நீரை நிர்வகிக்க மிகப்பெரிய நீர்த்தேக்கம் இந்தியா சார்பில் கட்டப்பட உள்ளது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு மம்தா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியா-வங்கதேசம் இடையிலான கங்கை நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தம் வரும் 2026-ல் முடிகிறது.
இதை புதுப்பிக்க வங்கதேச பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஆலோசனையை கேட்காமல் ஆலோசனை நடத்தி இருப்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த ஒப்பந்தத்தால் மேற்கு வங்கமக்கள் கடுமையாக பாதிக்கப்படு வார்கள்.
ரயில் மற்றும் பேருந்து சேவை உட்பட பல்வேறு விவகாரங்களில் வங்கதேசத்துடன் மேற்கு வங்க அரசு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. ஆனால், தண்ணீர் என்பது மாநில மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினை. எனவே, இதில் சமரசம் செய்து கொள்ள முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.