மே 13-ல் ஆந்திரா தேர்தல்: ஜெகன் ஆட்சி தொடருமா? தங்கை ஷர்மிளா வீழ்த்திவிடுவாரா?

அமராவதி, மே 9- ஆந்திரா சட்டசபைத் தேர்தல் மே 13-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியைத் தக்க வைப்பாரா? புதைகுழிக்குப் போன காங்கிரஸுக்கு ஜெகனின் தங்கை ஒய்.எஸ். ஷர்மிளா உயிர் கொடுத்துவிடுவாரா? மாஜி முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மீண்டும் அரியணை கிடைக்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பு. ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள், 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. ஆந்திராவில் 25 லோக்சபா தொகுதிகளுக்கு மே 13-ல் தேர்தல் நடைபெற உள்ளது. அதே நாளில் ஆந்திரா சட்டசபை பொதுத் தேர்தல் ஒரே கட்டமாக 175 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. 2014-ம் ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி 117 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது; ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 70, காங்கிரஸ் 21 இடங்களில் வென்றிருந்தது. மஜ்லிஸ் கட்சிக்கு 7 இடங்கள் கிடைத்தன. அப்போது ஒருங்கிணைந்த ஆந்திரா என்பதால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி களத்தில் இருந்தது. 2019-ல் அசால்ட்டாக வென்ற ஜெகன்: 2019-ம் ஆண்டு தேர்தலில் 151 இடங்களில் வென்று முதல் முறையாக ஜெகன் மோகன் ரெட்டி முதல்வரானார். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சிக்கு 23 இடங்கள்தான் கிடைத்தது. ஆந்திராவை கோட்டையாக வைத்திருந்த காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. களம் காணும் கட்சிகள்: தற்போதைய 2024-ம் ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தனித்தே களம் காண்கிறார். தெலுங்குதேசம் கட்சி, ஜனசேனா மற்றும் பாஜக இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் கட்சி இடதுசாரிகளுடன் இணைந்து நிற்கிறது. களத்தில் எத்தனை இடங்களில் போட்டி?: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 175 இடங்களிலும் தெலுங்குதேசம் கட்சி 144 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. ஜனசேனா 21, பாஜக 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி 159 இடங்களிலும் சிபிஎம் 8, சிபிஐ 8 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் கருத்து கணிப்புகள்: ஆந்திரா சட்டசபைத் தேர்தலில் மீண்டும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வென்று ஆட்சியைத் தக்க வைப்பார் என்றே தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன.