மைசூரில் அக்.15 முதல் 24 வரைதசரா விழா – ஏற்பாடுகள் தீவிரம்

மைசூரு அக். 6- மைசூரு
மாவட்டத்தின், 8 தாலுகாக்கள் உட்பட, மாநிலத்தின், 195 தாலுகாக்களை, வறட்சி பாதித்ததாக, அரசு அறிவித்தாலும், மைசூரு தசரா விழாவிற்காக‌, ‘வறட்சி’ இல்லாத வகையில், நகரமே கோலாகலமாக காட்சியளிக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
தசரா விழா பிரமாண்டமாக நடத்தப்படும்’ என, முதல்வர் சித்தராமையா அறிவித்தார். ஆனால், மைசூரு மாவட்டத்தில் சில தாலுகாக்கள் வறட்சியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விழாவை எளிமையாக கொண்டாட வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து, மாவட்டப் பொறுப்பாளர் அமைச்சர் டாக்டர் எச்.சி.மகாதேவப்பா சமூக ஊடகங்களில் தசரா விழா எளிமையாக நடைபெறும் என்றார். தற்போது அவர், இந்த முறை, பாரம்பரியமான தசரா எளிமையாகவோ அல்லது பிரமாண்டமாகவோ கொண்டாடப்படும் என தெரிவித்து வருகிறார்.
இம்முறையும் கடந்த ஆண்டுகளைப் போலவே விழாவை சிறப்பாக கொண்டாட திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்காக‌ 18 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இளைஞர் தசராவை முன்னிட்டு, ‘யுவ சம்பிரமா’ நிகழ்ச்சி ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 13 வரை தினமும் மாலை மானஸ் கங்கோத்ரியின் திறந்தவெளி அரங்கில் நடைபெறும்.
நிகழாண்டு கலாசார நிகழ்ச்சிகள் கூடுதலாக மூன்று வெளிப்புற நிலைகளுக்கு நீட்டிக்கப்பட்டது. அம்பாவிலாச அரண்மனை வளாகம், சிட்டி ஹால், ஜெகன்மோகன் அரண்மனை, சிக்கா கடிகாரம், கலாமந்திர், கலாமந்திர் வளாகம் மினி தியேட்டர், நாதபிரம்ம சங்கீத சபா, கணபாரதி மேடை மற்றும் நஞ்சன்கூடு அரண்மனை மாலா ஆகிய இடங்களில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்முறை ராமகிருஷ்ணா நகரில் உள்ள ‘நடனா’ தியேட்டர் மற்றும் ராமகோவிந்தா தியேட்டரில் நாடக நிகழ்ச்சி நடக்கிறது.
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்கும் கலைஞர்களின் சம்பளத்திற்காக‌ ரூ.1.60 கோடி தேவைப்படுகிறது. இதற்காக ரூ. 2 கோடி ரூபாய் மானியம் கோரப்பட்டுள்ளது.
இம்முறை, மொத்தம் 181 சாலைகள் (மொத்தம் 135 கி.மீ) மற்றும் 129 சாலை சதுக்கங்கள் மின்மயமாக்கப்படுகின்றன. இதற்காக‌ 1,31,805 யூனிட் மின்சாரம் தேவைப்படும் என்றும், ரூ.6.03 கோடி செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. விழாவில் அரசு உத்தரவாத திட்டங்கள், சந்திரயான்-3 மற்றும் ஜி-20 உச்சிமாநாட்டின் கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படும்.இம்முறை ஊர்வலத்தில் பங்கேற்கும் பணியாளர்களுக்கு பாரம்பரிய முறையில் சிறப்பு உடை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் இந்த நடைமுறை இல்லை.
இசை அமைப்பாளர் ஹம்சலேகா வரும் 15ம் தேதி சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரிக்கு பூஜை செய்து விழாவை தொட‌க்கி வைக்கிறார். தசராவிழாவின் முக்கிய நிகழ்வான‌ ஜம்பூசவரி, வரும் 24ம் தேதி அம்பாவிலாச அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னிமண்டப தீபந்த‌ அணிவகுப்பு மைதானம் வரை விஜயதசமியன்று நடைபெறும்.தசரா விழாவிற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.30 கோடி ரூபாய் மானியத்திற்கான கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டு, கன்னடம் மற்றும் கலாசாரத் துறையிடம் இருந்து ரூ.15 கோடி பெறப்பட்டுள்ளது. மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து ரூ.10 கோடியும், மைசூரு அரண்மனை வாரியத்திடமிருந்து ரூ.5 கோடியும், விளம்பதாரர்கள் மூலம் ரூ.1 கோடியும், தங்க அட்டை விற்பனை மூலம் ரூ.76.98 லட்சமும் எதிர்பார்க்கப்படுகிறது. 2021ல் கரோனா பாதிப்பால் தசரா விழா எளிமையாக நடத்தப்பட்டது. அப்போது செலவு ரூ.5.42 கோடி. 2022 ஆம் ஆண்டில், பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட தசரா விழாவின் செலவு ரூ. 28.74 கோடியாகும். இம்முறை விழாவிற்கான செலவு ரூ.25 கோடியை தாண்டும் என தெரிகிறது.