மைசூர் சாமுண்டீஸ்வரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

மைசூர், அக்.15-
உலகப் பிரசித்தி பெற்ற மைசூர் தசரா உற்சவம் துவங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இந்நிலையில் மைசூர் சாமுண்டீஸ்வரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் ரோஹினி சிந்தூர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாடெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதால், அதிக அளவில் கூட்டம் குவியக் கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தசரா விழாவை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இரண்டு கட்டமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் நவம்பர் எட்டாம் தேதி வரை முதற்கட்டமாக கோவிலுக்கு அனுமதி தடை விதிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக அக்டோபர் 23ஆம் தேதி முதல் நவம்பர் ஒன்றாம் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.
இம்மாதம் 17ஆம் தேதி நடைபெறும் தசராவின் போது சாமுண்டீஸ்வரி கோவிலில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 15 முதல் தசரா மகோற்சவம் முன்னிட்டு மைசூர் மாவட்ட ஆட்சியாளர் ரோஹினி
சிந்தூர் உத்தரவின்படி அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
தசரா திருவிழாவை எளிய முறையில் கொண்டாட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் எச்சரிக்கையோடு செயல்படுத்துவதால், கோவில் பிரவேசம் தடுக்கப்பட்டு உள்ளது.
தசரா பண்டிகையை ஒட்டி பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த வரும் தனியார் வாகனங்களும் அதிக அளவு சாமுண்டீஸ்வரி மலைக்கு
சுவாமியை தரிசிக்க வருவதை கட்டுப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இம் மாதம் 17 ஆம் தேதி தசரா உற்சவத்தை ஜெயதேவா மருத்துவமனை தலைமை டாக்டர் மஞ்சுநாத் துவக்கி வைக்கிறார்.
மைசூர் தசரா துவக்க தினமான 17ஆம் தேதி சிறப்பு பூஜையில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது .இறுதி நாளன்று 300 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தசரா மகோற்சவம் 17ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தடுப்பு எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.