மைசூர் தசரா விழா துவக்கி வைத்து டாக்டர் மஞ்சுநாத் உருக்கம்

மைசூர், அக். 17-
உலக புகழ்பெற்ற மைசூர் தசரா விழா இன்று துவங்கியது. கொரோனா போராளிகளை கௌரவிக்கும் வகையில் ஜெயதேவா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் மஞ்சுநாத் தசரா விழாவை துவக்கி வைத்தார்.
கொரோனா தொற்று நோய் பாதிப்பால் உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதை சாமுண்டீஸ்வரி தாய் ஒழிக்க பிரார்த்திக்கிறோம் என்று தசரா விழாவை துவக்கி வைத்த டாக்டர் மஞ்சுநாத் தெரிவித்தார். கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் இனி தொடர கூடாது எக்காரணத்துக்கும் கொரோனா தொற்று பரவாமல் அனைவருக்கும் முழுமையாக ஆரோக்கியம் கிடைக்க வேண்டும். டாக்டர் ஒருவர் தசராவை துவக்கி வைப்பது இதுவே முதல்முறையாகும். அந்த வகையில் மருத்துவரான தனக்கு அந்த வாய்ப்பை அளித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் கர்நாடக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சுற்றுப் புற சூழல் பாதித்தால் உலகமே முழுவதுமே நாசமாகி விடும். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பரவாமல் தடுப்புக்கு முக கவசம் அணிய வேண்டும். சுத்தமான நீரில் கை கழுவ வேண்டும். சமூக இடைவெளி அவசியம் தேவை. இதனை அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும்.
மருத்துவ சமுதாயத்திலும் கூட மருத்துவர்களும் கூட அவரவர் உடல் ஆரோக்கியம் மீது கவனம் செலுத்த வேண்டும். சில மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்று பயத்தால் கிராம பகுதிகளில் சேவை செய்ய செல்ல மறுக்கிறார்கள். மருத்துவர்கள் கிராமங்களில் சேவை செய்வதற்கான பாதுகாப்பு வசதிகளையும் அரசு செய்து தர வேண்டும்.
முதலில் நோயாளிகளை காப்பாற்ற மருத்துவர்களின் சேவை மிக அவசியமாகும். சமூக வலைத்தளங்களில் மக்களை திசை திருப்ப தவறான தகவல்களை பரப்புவது சரியல்ல. கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியவர்கள் தவறான தகவல்களை வெளிப்படுத்தி வருகிறார்கள் அத்தகையோருக்கு கடிவாளம் போட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இவ்விழாவில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சோமசேகர், எச்.விஷ்வநாத், அமைச்சர் சி.சி.பாட்டீல், ஹர்ஷ் வர்தன், பிரதாப் சிம்மா எம்.பி., ராம்தாஸ், மேயர் தஸ்னீம், ஜில்லா பஞ்சாயத்து தலைவர் பரிமளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.