மொத்தம் 141 எம்.பி.க்கள் இடைநீக்கம்

புதுடெல்லி: டிச. 20-நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதாக மேலும் 49 பேர் உட்பட மொத்தம் 141 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடர்பாக கடந்த 4 நாட்களாக எதிர்க்கட்சிகள் மக்களவை, மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு வந்தன.நேற்று முன்தினம் மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இருக்கைக்குத் திரும்புமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களை சபாநாயகர் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டபோதும் அவர்கள் திரும்பவில்லை.
இதையடுத்து மக்களவை உறுப்பினர்கள் 33 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதேபோல அமளியில் ஈடுபட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் 45 பேர் என மொத்தம் 78 எம்.பி.க்கள் நேற்று முன்தினம் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த வாரம் மக்களவையில் 13 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் ஒரு எம்.பி. என மொத்தம் 14 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இதையடுத்து 2 அவைகளிலும் சேர்ந்து 92 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தனர்.வரலாற்றில் முதல்முறை: நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் நடந்தது தொடர்பாக, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் அறிக்கைகள் மற்றும் விவாதத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததற்காக மொத்தம் 141 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 49 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே கூட்டத்தொடரில் 141 எம்.பி.க்கள் 2 அவைகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.