மோசடியாக வெற்றி பெறும் பாஜக: அகிலேஷ் யாதவ்

டெல்லி: பிப்ரவரி 21
மோசடியாக தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். சண்டிகர் மேயர் தேர்தலின்போது வாக்குச்சீட்டுகளை சிதைத்ததாக தேர்தல் அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று கண்டனம் தெரிவித்தது.இதையடுத்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு செய்த குற்றத்தை பாஜக ஆதரவு தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டுள்ளார். இது பாஜக எந்த அளவுக்கு அதிகாரப் பசியில் உள்ளது என்பதை காட்டுகிறது.
இதற்கு சட்ட மற்றும் அரசியல் சாசன அடிப்படையில், நாட்டு மக்களிடம் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜக எல்லா இடங்களிலும் ஆட்சியை விட்டுக்கொடுக்க வேண்டும்.ஜனநாயகத்தை வெளிப்படையாக கொல்லும் இந்த வெட்கக்கேடான செயலுக்கு பாஜக ஆதரவாளர்கள் தலைகுனிய வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் திருட்டு மற்றும் மோசடி மூலம் பாஜக எப்படி வெற்றி பெறுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இப்படிப்பட்டவர்களின் கைகளில் தேசமோ, மக்களின் நிகழ்காலமோ, அவர்களின் குழந்தைகளின் எதிர்காலமோ பாதுகாப்பாக இருக்காது. பாஜக ஆதரவாளர்களுக்கு இன்று தார்மீக துக்க நாள்.அரசாங்க அழுத்தம் காரணமாக குற்றச் செயல்களை செய்யும் அதிகாரிகளும் இந்த சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இது அவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையை அழிக்கும். ஏனெனில் இதுபோன்ற குற்றங்கள் தேசத் துரோகத்துக்கு குறைவானது அல்ல. அதற்காக அவர்கள் கண்டிப்பாக கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.பாஜகவினர் அவர்களை பயன்படுத்திக் கொண்டு, பாலில் விழுந்த ஈயை போலத் தூக்கி எறிந்து விடுவார்கள், வெட்கமும் அவமானமும் நிறைந்த வாழ்க்கையை கம்பிகளுக்குப் பின்னால் என்றென்றும் வாழ வேண்டும் என்பதை அதிகாரிகள் இப்போது புரிந்து கொள்ள வேண்டும்.