மோசடி மன்னனை சந்தித்து விலை உயர்ந்த பரிசுகளை பெற்ற 4 நடிகைகள்

புதுடெல்லி, செப்.16
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இவர் மீது பல மோசடி வழக்குகள் உள்ளன. டெல்லி திகார் சிறையில் இவர் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும்போது மற்றொரு மோசடி வழக்கிலும் சிக்கினார். தொழில் அதிபர் ஒருவருக்கு ஜாமீன் எடுத்து தருவதாகக்கூறி, தொழில் அதிபரின் மனைவியிடம் ரூ.200 கோடியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் சுகேஷ் சந்திரசேகரின் மனைவி லீனா மரியபால், சுகேசின் உதவியாளர் பிங்கி இரானி உள்ளிட்டோரும் கைதாகினர். மோசடி பணத்தில், சுகேஷ் சந்திரசேகர் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக கண்டறியப்பட்டது. பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்பட பல நடிகைகளுடன் தன் உதவியாளர் பிங்கி இரானி மூலம் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இதற்காக நடிகைகளுக்கு பணத்தை வாரி இறைத்துள்ளார். அவர் செய்த குற்றங்கள் தொடர்பாக அமலாக்க பிரிவு அதிகாரிகளும், டெல்லி குற்றப்பிரிவு போலீசாரும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்திருந்தனர். அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். டெல்லி போலீசார் இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் அடிப்படையில் ஜாக்குலின் பெர்னாண்டசிடம் நேற்று முன்தினம் 8 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அதைப்போல பிங்கி இரானியிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். இவர்கள் 2 பேரின் வாக்குமூலங்களிலும் முரண்பாடுகள் இருப்பதாக தெரிகிறது. இதனால் பிங்கி இரானியை போலீசார் நேற்றும் விசாரணைக்கு அழைத்தனர். ஜாக்குலின் பெர்னாண்டசை தேவைப்பட்டால் அழைப்பதாகவும், அதுவரை டெல்லியிலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையே நேற்று பிங்கி இரானியிடம் மட்டுமின்றி, வழக்கில் தொடர்புடைய மற்றொரு நடிகையான நோரா பதேகியிடமும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. தனித்தனியாகவும், இருவரையும் ஒன்றாக வைத்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து உள்ளனர்.