Home Front Page News மோசமான சாலை – ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பிய நபர்

மோசமான சாலை – ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பிய நபர்

பெங்களூரு: மே 20-
கர்நாடகாவில் கடந்த சிலநாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்கியதால் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி வழிந்தன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. தலைநகர் பெங்களூரு மட்டுமின்றி மைசூரு, கோலார், தும்கூரு, ஹாசன் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இந்த நிலையில், பெங்களூரு சாலைகளில் ஏற்பட்ட சேதத்தினால் வாகனம் ஓட்ட முடியாமல் உடல் மற்றும் மனா ரீதியாக பாதிப்பு அடைந்ததாக கூறி பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு 43 வயதான நபர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில் “நான் வரி செலுத்தும் ஒரு குடிமகன். பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் நகரின் அடிப்படை உள்கட்டமைப்பை பராமரிக்க தவறியுள்ளது. பெங்களூரு நகரின் இந்த மோசமான சாலைகளில் பயணிக்கும்போது உடல் ரீதியான துன்பங்களையும் மன வேதனையையும் எதிர்கொண்டேன். இதனால் ஏற்பட்ட கடுமையான கழுத்து மற்றும் முதுகு வலி காரணமாக, எலும்பியல் மருத்துவமனைக்கு ஐந்து முறை சென்றேன். எனக்கு 4 முறை அவசர சிகிச்சை அளித்தனர்” என்று தெரிவித்துள்ளார். இந்த நோட்டீஸுக்கு பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் எதுவும் வரவில்லை.

Exit mobile version