மோடிக்காக பணியாற்றும் மம்தா ஆதிர் ரஞ்சன் குற்றச்சாட்டு

கொல்கத்தா:ஜன. 5: எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் அந்தந்த மாநில அளவில் நடைபெற்று வருகின்றன. மேற்குவங்க தொகுதிப் பங்கீட்டில் ஆளும் திரிணமூல் கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு உள்ளது.இதுதொடர்பாக மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பகரம்பூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மேற்கு வங்க தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸுக்கு 2 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்காக முதல்வர் மம்தா பானர்ஜி பணியாற்றி வருகிறார். அதனால்தான் அவர் கூட்டணி அரசியலை விரும்பவில்லை. கூட்டணி அரசியலில் ஈடுபட்டால் பிரதமர் நரேந்திர மோடி கோபப்படுவார். அவரை கோபப்படுத்த மம்தா விரும்பமாட்டார். மோடிக்கு விருப்பமான விஷயங்களில் மட்டுமே அவர் ஆர்வம் காட்டுவார்.மேற்கு வங்கத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைமை முடிவு எடுக்கும். யாருடைய கருணையின் மூலம் தேர்தலில் போட்டியிட நான் விரும்பவில்லை. முதல்வர் மம்தா பானர்ஜியை நம்ப முடியாது. இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.