மோடியை சந்திக்கும் மம்தா

புதுடெல்லி, ஆக. 5 டெல்லியில் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்றார். இந்நிலையில், இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேச உள்ளார். மேலும், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச மம்தா திட்டமிட்டுள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் அம்மாநில முன்னாள் மந்திரி பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார். அவருக்கு நெருக்கமான நடிகை அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஊழல் வழக்கில் முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கும் தொடர்பிருப்பதாக பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த சூழலில், அவருடைய இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.