மோடியை வழிபடும் அமைப்பாகிவிட்டது பிஜேபி – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்:,ஏப். 22-‘இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் முதல் நாடாளுமன்ற கூட்டத்திலேயே குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) ரத்து செய்வோம்’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறி உள்ளார். கேரளாவில் 2ம் கட்ட மக்களவை தேர்தல் வரும் 26ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் வலுவான பெரும்பான்மையை தவறாக பயன்படுத்தியதால் கடந்த 10 ஆண்டுகளில் பாஜ கட்சி நாட்டிற்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பாஜ கொண்டு வந்த 5 சட்டங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டியது. அதில் குடியுரிமை திருத்த சட்டமும் (சிஏஏ) ஒன்று. சிஏஏ சட்டத்தை திருத்துவது அல்ல, ரத்து செய்வதுதான் காங்கிரசின் நிலைப்பாடு.
மத்தியில் இந்தியா கூட்டணி அரசு அமைந்ததும், முதல் நாடாளுமன்ற கூட்டத்திலேயே சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும். இதை எங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை என்றாலும், காங்கிரஸ் சிஏஏவை ரத்து செய்வதில் உறுதியாக உள்ளது. பாஜவின் தேர்தல் அறிக்கை வெறும் 14 நாட்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு மோடியின் உத்தரவாதம் என பெயரிட்டுள்ளனர். எனவே பாஜ இப்போது ஒரு அரசியல் கட்சியாக இல்லை. அது மோடியை வணங்கி வழிபடும் அமைப்பாகி விட்டது. இந்தியாவில் அந்த வழிபாடு வலுப்பெறத் தொடங்கியுள்ளது. இது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும். மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பையே மாற்றி விடுவார்கள். அப்படி நடந்தால் இதுபோல் நான் பேட்டி அளிக்க முடியுமா என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் மொத்தம் 40 தொகுதியிலும் முழுமையாக இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.