மோடியை விமர்சித்து திமுக நூதன பிரச்சாரம்

கோவை: மார்ச் 6-
பிரதமர் நரேந்திர மோடி சுட்ட வடை எனக் கூறி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வடை சுட்டு பொதுமக்களுக்கு வழங்கி, வினோத பிரச்சாரத்தை திமுகவினர் முன்னெடுத்து வருகின்றனர்.லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் சார்பில் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுக்கூட்டங்கள், பிரச்சார விளம்பரங்களில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுகவின் நூதன பிரச்சாரம் கவனம் ஈர்த்து வருகிறது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் திமுகவினர் பொதுமக்களுக்கு வடை சுட்டு வழங்கியதுடன், பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாகவும், அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை எனக் கூறியும் பிரசாரம் செய்தனர். மோடி சுட்ட வடைகள் என சில திட்டங்களை துண்டு சீட்டில் பட்டியலிட்டு அதில் வடையை வைத்து பொதுமக்களுக்கு வழங்கி வினோத முறையில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.வெறும் வாயால் வடை சுட்டு வருகிறார் பிரதமர் மோடி என விமர்சனம் செய்திருந்தனர். முன்னதாக, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மாணிக்காபுரம் சாலையில் வடை சுட்டுக் கொடுத்து திமுகவினர் நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திமுக பொதுக்கூட்ட மேடை அருகே தள்ளு வண்டி கடையில் மோடி முகம் பொறித்த முகமூடியை அணிந்து கொண்டு சுடச் சுட வடை சுட்டு கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் இது மோடி சுட்ட வடை என பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரம் மூலம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.