மோடி அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கை வெளியிட காங்கிரஸ் முடிவு

புது டெல்லி : பிப்ரவரி . 8 – ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக மத்திய அரசு வெளியிட உள்ள வெள்ளை அறிக்கைக்கு பதிலாக காங்கிரஸ் கட்சி மோதி தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சி குறித்து கருப்பு அறிக்கை வெளியிட உள்ளது. கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த கருப்பு அறிக்கையை வெளியிட உள்ளார். சமீபத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2014 முதல் இன்று வரையிலான நாட்டின் நிதி நிலைமைகளை காங்கிரஸ் ஆட்சி காலம் மற்றும் மோதி ஆட்சி காலத்துடன் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக தெரிவித்தார். தற்போது பாராளுமன்ற கூட்ட தொடர் ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிரான வெள்ளை அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. தவிர பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நடக்கும் கடைசி பாராளுமன்ற கூட தொடர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரு அவைகளிலும் மோதி உரையாற்றுகையில் காங்கிரஸ் ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்திருப்பதுடன் தன்னுடைய மூன்றாவது முறை ஆட்சிக்கான திட்டங்கள் குறித்தும் தெரிவித்திருந்தார்.