மோடி அரசு சாதனையை ராகுல் ஒப்புக்கொண்டுள்ளார் – பிஜேபி

ராய்ப்பூர், பிப். 27-
ராய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராகுல்காந்தி, தான் காஷ்மீரில் பாதயாத்திரை மேற்கொண்டபோது, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்பட பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தேசிய கொடி ஏற்றி இருந்ததை பார்த்ததாக தெரிவித்தார். இந்தநிலையில், பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா, இதை வைத்து ராகுல்காந்தியை கிண்டல் செய்துள்ளார். பா.ஜனதா தலைமையகத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இன்று உலகமே இந்தியாவை பிரகாசமான நாடாக பார்க்கிறது. ஆனால், இந்தியா அழிக்கப்பட்டு விட்டதாக ராகுல்காந்தியும், மற்ற காங்கிரஸ் தலைவர்களும் எதிர்மறை அரசியல் செய்து வருகிறார்கள். அதே சமயத்தில், காஷ்மீரில் மோடி அரசின் சாதனையை முதல்முறையாக ஏற்றுக்கொண்டதற்காக ராகுல்காந்திக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன்பு தேசிய கொடி ஏற்றப்படாத காஷ்மீரில், இப்போது ஆயிரக்கணக்கான தேசிய கொடிகளை காங்கிரஸ் பார்க்கிறது என்றால், அதற்கான காரணம் என்ன என்பது பற்றி ராகுல்காந்தி சிந்திக்க வேண்டும்.
லால் சவுக் உள்ளிட்ட இடங்களில் மக்கள் தேசிய கொடி ஏற்றுவதற்கு மோடி அரசின் நல்ல நிர்வாகமே காரணம். பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு இருப்பதை ராகுல்காந்தி ஒப்புக்கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். மேலும், காங்கிரஸ் மாநாட்டில் ராகுல்காந்தி பேசுகையில், ”சத்யாகிரகம் என்பதற்கு அதிகாரத்துக்கு செல்லும் பாதையில் இருந்து விலகக்கூடாது என்று பொருள்” என்று கூறினார். பிறகு சுதாரித்துக்கொண்டு, ”மன்னிக்கவும். அப்படி, பா.ஜனதா நினைக்கிறது. சத்யாகிரகம் என்பதற்கு உண்மை பாதையில் இருந்து விலகக்கூடாது என்று அர்த்தம்” என்று கூறினார். இந்த நிலையில், இதை சத்தீஷ்கார் மாநில பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் ராஜேஷ் முனாத் கிண்டல் செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- உங்கள் மனதில் இருப்பது வார்த்தைகளில் வெளிவந்து விட்டது. ‘அதிகார பாதையில் இருந்து விலகக்கூடாது’ என்பதுதான் காங்கிரசின் ஒரே தாரக மந்திரம். சத்யாகிரகத்துக்கான பொருளையும், உச்சரிப்பையும், உணர்வையும் ராகுல்காந்தி முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.