மோடி குறித்து அவதூறு பேச்சு: ராகுல் காந்திக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: நவ.24-
தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் நாளை (நவ.25) நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த 22-ம் தேதி ராஜஸ்தானின் பார்மேர் மாவட்டம், பய்டோ பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சார கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.
இக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் ராகுல் பேசியதாக பாஜக சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி தவறாக பேசியுள்ளார். குறிப்பாக, ‘பிரதமர் மோடி, தொழிலதிபர் அதானி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பிக்பாக்கெட் கும்பலை சேர்ந்தவர்கள். அபசகுனம் பிடித்த பிரதமர் மோடி பார்க்கச் சென்றதால்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாதோல்வி அடைந்தது. கடந்த 9 ஆண்டுகளில் 15 தொழிலதிபர்களின் ரூ.14 லட்சம் கோடி கடனை மோடி தள்ளுபடி செய்துள்ளார்’ என்று, அவதூறு ஏற்படுத்தும் வகையில் 3 பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, ராகுல் காந்திக்கு தலைமை தேர்தல் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி குறித்த உங்கள் (ராகுல் காந்தி) கருத்து தேர்தல் நடத்தை விதிமீறல் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பிரச்சாரத்தின்போது வேட்பாளர்கள், கட்சிகள் குறித்து அவதூறாக பேசக்கூடாது. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை சுமத்த கூடாது என்று நடத்தை விதிகளில் கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளது. சுப்பிரமணியன் சுவாமி – மத்தியஅரசு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். உங்கள் மீது கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக நவ.25 (நாளை) மாலை 6 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆணையம் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.