மோடி, சந்திரசேகர ராவ் சதி திட்டங்களை தீட்டி வருகின்றனர்” – ரேவந்த் ரெட்டி

ஹைதராபாத், ஏப். 23- தெலங்கானா மாநிலம், ஆதிலாபாத் மாவட்டத்தில் தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பிரச்சாரம் செய்தார்.அப்போது ‘ஜனஜாத்திரை சபை’ எனும் பெயரில் ஆதிலாபாத்தில் நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டு பேசியதாவது: நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கொடுத்த 6 கேரண்டி வாக்குறுதிகளில் 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். விரைவில் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வங்கி கடன் தள்ளுபடி எனும் 6வது வாக்குறுதியையும் நிறைவேற்றுவோம். காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாதவண்ணம் அவர்களின் விளைச்சலை அரசே வாங்கி வருகிறது. இலவச பேருந்து பயணம் திட்டத்தின் கீழ் இதுவரை 35 கோடி மகளிர்அரசு பேருந்துகளில் இலவசமாக பயணித்துள்ளனர். கடந்த 3 மாதங்களிலேயே 30 ஆயிரம் அரசு பணிகளை நிரப்பி உள்ளோம். ரூ. 500-க்கே சமையல் காஸ் சிலிண்டர் வழங்கி வருகிறோம். ரூ. 10 லட்சம் வரை ஏழைகள் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெறலாம். இவ்வளவு நல்ல நல திட்டங்களை காங்கிரஸ் அரசு அமல் படுத்தி வந்தாலும், இந்த காங்கிரஸ் அரசை கவிழ்க்க மோடியும், சந்திரசேகர ராவும் இணைந்து சதி திட்டங்களை தீட்டி வருகின்றனர். இலவச மின்சாரம் திட்டத்தினால் ஏழைகளின் வீடுகளில் வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. அது இவர்கள் இருவருக்கும் பிடிக்க வில்லை. இவ்வாறு ரேவந்த் ரெட்டி பேசினார்.