மோடி தலைமையிலான 3-வது ஆட்சியில்” யோகி நம்பிக்கை

புதுடெல்லி மார்ச் 12:
உத்தர பிரதேச மாநிலம் தியோரியா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நாரி சக்தி வந்தன் நிகழ்ச்சியில், ரூ.679 கோடி மதிப்பிலான 673 வளர்ச்சி திட்டங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: பாஜக தலைமையிலான கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் கிடைக்கும். இதன்மூலம் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் 3-வது முறையாக ஆட்சி அமையும். மோடி தலைமையிலான 3-வது ஆட்சிக் காலத்தில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்.
இதன்மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வருமானமும் அதிகரித்து அனைவருடைய வாழ்க்கையும் செழிப்படையும். 2047-க்குள் வளர்ந்த இந்தியாவாக உருவெடுக்க வேண்டும் என்ற இலக்கை எட்ட பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு ஆதரவளிக்க நாட்டு மக்கள் உறுதி பூண்டுள்ளனர்.
தியோரியா பகுதி ஒரு காலத்தில் நாட்டின் சர்க்கரை கிண்ணமாக விளங்கியது.
ஆனால், முந்தைய ஆட்சியாளர்களின் அலட்சியம் காரணமாக இப்பகுதி சர்க்கரை உற்பத்தியில் பின்தங்கியது.
குறிப்பாக இங்கிருந்த சர்க்கரை ஆலைகள் முந்தைய அரசுகளால் குறைந்த விலைக்கு விற்கப்பட்டன. இதனால் இப்பகுதி ஏழ்மை நிலைமைக்கு சென்றது. பாஜக அரசு இங்கு சர்க்கரை உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.