மோடி நாளை திருச்சி வருகை – விமான நிலைய புதிய முனையம் திறந்து வைக்கிறார்

திருச்சி: ஜன. 1: விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜன.2) திருச்சி வருகிறார். விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை திருச்சி வருகிறார்.இதற்காக டெல்லியில் இருந்து நாளை காலை 7 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர், காரில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அந்த விழாவில், 33 பேருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
3 அடுக்கு பாதுகாப்பு: பிரதமர் வருகையையொட்டி, 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமையில் திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் (எஸ்பிஜி) கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்து, நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனைகளை நடத்தி பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.தீவிர சோதனை: திருச்சி விமான நிலையத்தில் இருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரையிலான 11 கிமீ தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பிரதமர் வருகையின்போது, இடையூறு ஏற்படாத வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலையில் இன்று (ஜன.1) இரவு 8 மணி முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுவழியில் வாகனங்களை திருப்பிவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாக்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் வழித்தடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனை செய்து வருகின்றனர்.அரசு, பாஜக வரவேற்பு: பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்கின்றனர். அதேபோல, பாஜக சார்பில் 7 இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பிரதமரை வரவேற்று, பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. 5 இடங்களில் அலங்கார நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.