மோடி நாளை பதவி ஏற்பு – உலகத் தலைவர்கள் வருகை

புதுடெல்லி: ஜூன் 8: தொடர்ந்து 3வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி நாளை இரவு 7.15 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். அவரை புதிய பிரதமராக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டு உள்ளார். மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள உலக தலைவர்கள் வருகிறார்கள். 18வது மக்களவை தேர்தல் ஏப்.19 தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக நடந்தது. ஜூன் 4ம் தேதி நடந்த ஓட்டு எண்ணிக்கையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக பா.ஜ 240, காங்கிரஸ் 99 இடங்களை பிடித்தன.
ஆனால் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய அரங்கில் நேற்று நடந்தது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் அனைத்து தலைவர்களும், புதிதாக தேர்வு செய்யப்பட்ட கூட்டணிகட்சி எம்பிக்களும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பா.ஜ மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் மற்றும் மக்களவைத் தலைவராக மோடியின் பெயரை ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார்.
தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிமொழிந்தார். இதன்பின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக மோடியை பிரதமராக தேர்வு செய்வதற்கு தங்கள் ஆதரவினை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழுத்தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அனைவரது ஆதரவையும் இருகரம் கூப்பி மோடி ஏற்றுக்கொண்டார். பின்னர் மோடி பேசியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக அனைவரும் ஒருமனதாக என்னை தேர்வு செய்திருக்கிறீர்கள். நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு ஒரு புதிய பொறுப்பை வழங்கியுள்ளீர்கள். நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.2019ல் இந்த சபையில் நீங்கள் அனைவரும் என்னை தலைவராக தேர்ந்தெடுத்தீர்கள். இன்று மீண்டும் இந்த பொறுப்பை எனக்கு வழங்குகிறீர்கள் என்றால், இந்த உறவு வலுவானது என்று அர்த்தம்.நம்பிக்கையின் வலுவான அடித்தளத்தில் அமைந்துள்ள இந்த உறவுதான் மிகப் பெரிய சொத்து. அரங்கில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும், மாநிலங்களவை எம்.பி.க்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்காக இரவு பகலாக உழைத்த லட்சக்கணக்கான தொண்டர்களை இன்று இந்த மைய மண்டபத்தில் இருந்து வணங்குகிறேன்.இந்தியாவின் மாபெரும் ஜனநாயகத்தின் வலிமை காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணி இன்று 22 மாநிலங்களில் ஆட்சி அமைக்கவும், பணியாற்றவும் மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். நம் நாட்டில் 10 மாநிலங்களில் பழங்குடியின சகோதரர்கள் அதிகளவில் உள்ளனர். இந்த 10 மாநிலங்களில் 7ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.அரசை நடத்துவதற்கு மக்கள் கொடுத்த பெரும்பான்மையைக் கொண்டு ஒருமித்த கருத்துக்கு பாடுபடுவோம் என்றும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் எந்த ஒரு வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம் என்றும் நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல. இன்றைய சூழ்நிலையில், நாடு தேசிய ஜனநாயக கூட்டணியை மட்டுமே நம்புகிறது என்பதை 2024 தேர்தல் மீண்டும் வலுப்படுத்தி உள்ளது.நாங்கள் பணியாற்றிய 10 வருடங்கள் வெறும் ட்ரெய்லர் என்று நான் முன்பே கூறியிருந்தேன். நாங்கள் வெளியிட்டது வெறும் தேர்தல் அறிக்கை அல்ல, அது என்னுடைய அர்ப்பணிப்பு. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிகாரமளிப்பதே எங்கள் முன்னுரிமை. புதிய இந்தியா, வளர்ந்த இந்தியா, லட்சிய இந்தியா. இதுவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு என்பதை நான் அறிவேன். தென்னிந்தியாவில், புதிய அரசியலுக்கான அடித்தளத்தை தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்படுத்தியுள்ளது.கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் சமீபத்தில்தான் புதிய அரசுகள் அமைந்தன. ஆனால், அந்த மாநிலங்களில் மக்களின் நம்பிக்கை நொடிகளில் உடைந்துவிட்டது. தமிழ்நாட்டில் எங்களால் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அங்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதால், அது ஒரு தெளிவான செய்தியை அளிக்கிறது. கேரளாவில் நூற்றுக்கணக்கான நமது தொண்டர்கள் தியாகம் செய்ததன் விளைவாக, முதல் முறையாக அம்மாநிலத்தில் இருந்து ஒரு பிரதிநிதி வந்துள்ளார்.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பெயர் மாற்றப்பட்டது. மாறிய பிறகும் நாடு அவர்களை மன்னிக்கவில்லை; நாடு அவர்களை நிராகரித்துவிட்டது. நாட்டு மக்கள் இவர்களை எதிர்க்கட்சியில் அமர வைத்துள்ளனர் என்று சொல்லலாம். இவ்வாறு மோடி பேசினார்.இந்த கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி, பவன் கல்யாண், பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி, ஆர்எல்டி தலைவர் ஜெயந்த்சிங்கா, சிராக் பஸ்வான், அனுப்பிரியா பட்டேல், ஓபிஎஸ், ஜி.கே.வாசன், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன், ரவீந்திரநாத் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டம் முடிந்த பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மற்றும் எம்பிக்களின் ஆதரவு கடிதத்துடன் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேற்று மாலை மோடி சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாட்டின் புதிய பிரதமராக மோடியை நியமித்து உத்தரவிட்டார்.