மோடி பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்

புதுடெல்லி: ஜூன் 7:
மக்களவை தேர்தலில் அறுதி பெரும்பான்மையை பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மத்தியில் ஆட்சி அமைக்கிறது. மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 9-ம் தேதி மாலை பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை கூட்டணி கட்சி தலைவர்கள் வழங்கினர்.
இதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது. பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உட்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். கூட்டணி கட்சிகளின் மக்களவை குழு தலைவராக இக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார்.
இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்கும் மோடி, ஆதரவு எம்.பி.க்கள் பட்டியலை அவரிடம் வழங்கி, ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.
ஜூன் 9-ம் தேதி மாலை 6 மணிக்குகுடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் எளிய விழாவில் பாஜககூட்டணி அரசு பதவியேற்க உள்ளது.தொடர்ந்து 3-வது முறை பிரதமராகநரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். அவரோடு முக்கிய அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது.