மோடி பிரதமர் ஆவார்:எல்.முருகன்

புதுச்சேரி: அக். 16- புதுச்சேரி மாநில பாஜக புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வகணபதி எம்.பி-க்கு பாராட்டு விழா மரப்பாலம் சந்திப்பில் உள்ள தனியார் கன்வென்ஷன் சென்டரில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.இந்த பாராட்டு விழாவுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமை தாங்கினார். புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள், ஆதரவு எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:பாஜக தியாகத்துக்கு பெயர் போன கட்சி. பாஜகவின் தொண்டர்கள் சுயநலமற்றவர்கள். நிர்வாகிகள் பாரத தேசம் முக்கியம் என்று இருப்பவர்கள். பாஜகவின் நோக்கமே முதலில் நாடு, இரண்டாவது கட்சி, மூன்றாவது நாம் என்று இருக்கிறது.1980-ல் வெறும் 2 எம்பிக்களை கொண்டிருந்த கட்சி, இன்றைக்கு பல கோடி தொண்டர்களையும், உலகில் அதிக உறுப்பினர்களையும் கொண்ட கட்சி தான் பாஜக. இப்படிப்பட்ட கட்சியில் உள்ள நாம் சிறந்த தலைவரை கொண்டிருக்கின்றோம்.