மோடி மீதான இஸ்லாமியர்களின் பார்வை மாறுகிறது: பாஜக வேட்பாளர் கருத்து

புதுடெல்லி: மார்ச் 26- மக்களவை தேர்தலுக்காக பாஜக இதுவரை 290 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இவர்களில் சிறுபான்மை சமூகத்தின் முதல் வேட்பாளராக எம்.அப்துல் சலாம் என்பவர் (மலப்புரம்) அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர், கேரளாவின் கோழிகோடு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆவார். காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியின் ஆஸ்தான வெற்றி தொகுதியாக மலப்புரம் நீடிக்கிறது. இங்கு அக்கட்சிக்கு சவால் விடும் வகையில் அப்துல் சலாம் களமிறக்கப்பட்டுள்ளார். இதற்கு, மலப்புரம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் கணிசமாக இருப்பதே காரணம். இதுகுறித்து அப்துல் சலாம் கூறியதாவது:
முஸ்லிம்களின் வாக்குகளை பெற சிஏஏ சட்டத்தை எங்களுக்கு எதிரானதாக காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் போலி அறிவுஜீவிகளின் பிரச்சாரங்களையும் பெரும் பாலானவர்கள் நம்பி வருகின்றனர். பிரிவினையால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு நீதி அளிக்கவே சிஏஏ அமலாக்கப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசத்தில் பெரும்பான்மையினரான முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே, சிஏஏ பட்டியலில் தாம் சேர்க்கப்படாததன் காரணத்தை முஸ்லிம்கள் உணர வேண்டும்.
ஐயூஎம்எல் கட்சியின் கேரள மாநிலத் தலைவர் சாதிக் அலி ஷிஹாப் தங்கல், ராமர் கோயிலுக்கு எதிராக போராடத் தேவையில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். பிரதமர் மோடி மீதான பார்வையில் இஸ்லாமியர்களிடம் மெல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த பத்து வருடங்களில் பிரதமர் மோடியால் ஒரு முஸ்லிம் பாதிப்படைந்து இருப்பாரா? இவருக்கு முஸ்லிம்கள் ஏன் பயப்பட வேண்டும்? முத்தலாக் தடைக்கு ஆதரவளித்த பல முஸ்லிம் தாய்மார்களை நான் சந்தித்துப் பேசியுள்ளேன்.
இவர்கள் தங்கள் பெண் குழந்தைகளை பிரதமர் மோடிகாப்பாற்றியிருப்பதாக உணர்கின்றனர். முத்தலாக் தடைக்கு பின் முஸ்லிம் இளம்பெண்களும் பிரதமர் மோடிக்கு ஆதரவளிக்கத் தொடங்கினர். முத்தலாக் தடையால்விடுதலை பெற்ற பல பெண்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது.
இதுபோல், கிறிஸ்தவர்களும் பாஜகவுடன் நெருக்கமாகி வருவதில் எந்த சந்தேகமும் இல்லை. மத்திய கிழக்காசிய நாடுகளின் முஸ்லிம்கள் பிரதமர் மோடிக்கு நெருக்கமாகி விட்டனர். ஆனால், அந்த நாடுகளுடன் நெருக்கமான உறவுகள் கொண்ட கேரள முஸ்லிம்கள் பிரதமர் மோடியை நெருங்க தயங்குகின்றனர். கேரளாவில் பாஜக வளரும் கட்சியாகி விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற கருத்தை மாற்ற பாஜக தீவிர முயற்சியில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார். இதன் ஒரு பகுதியாக, பல ஆண்டுகளாக முஸ்லிம்கள் இடையே தவறாக பயன்படுத்தப்பட்டு வந்த முத்தலாக் நடைமுறைக்கு மத்தியஅரசு தடை விதித்தது. இதன் பலனாக 2019 மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்கள் அதிகமுள்ள உ.பி.யிலும் அச்சமூகப் பெண்கள் பாஜகவுக்கு வாக்களித்திருந்தது நினைவுகூரத்தக்கது.