மோடி மீது விமர்சனம்: மாலத்தீவு அதிபர் முய்சு பதவிக்கு ஆபத்து?

மாலே: ஜனவரி . 9 – இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் அதிபர் முய்சுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அந்நாட்டில் வலுத்து வருகிறது.
மாலத்தீவின் அதிபராக முய்சு பதவியேற்றது முதலே இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இந்தியாவை மாலத்தீவில் இருந்து வெளியேற்றுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்தே அதிபரானவர் முய்சு. இதனால் மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கான உறவுகள் சீர்குலைந்துவிட்டது. மாலத்தீவு தற்போது முழுமையான சீனா ஆதரவு நாடாக உருமாறி நிற்கிறது. மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் அண்மையில் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி அண்மையில் லட்சத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டதை மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்தது சர்ச்சையானது.. இதற்கு இந்தியாவுக்கான மாலத்தீவு தூதரை நேரில் அழைத்து கண்டனத்தை மத்திய அரசு தெரிவித்திருந்தது.
அதே நேரத்தில் மாலத்தீவு அரசு, அமைச்சர்களின் கருத்துக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என முதலில் கூறியது. பின்னர் பிரதமர் மோடியை விமர்சித்த 3 அமைச்சர்களை சஸ்பென்ட் செய்வதாகவும் மாலத்தீவு அரசு அறிவித்தது. இதனிடையே சமூக வலைதளங்களில் மாலத்தீவுக்கு எதிரான #BycottMaldives என்ற ஹேஷ்டேக்கும் அதிகமாக பகிரப்பட்டது. மாலத்தீவு பயணத்தை பலரும் ரத்து செய்துவிட்டோம் எனவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். மாலத்தீவு நாட்டிலும் அதிபர் முய்சுக்கு எதிராக குரல்கள் வலுத்து வருகின்றன.
மாலத்தீவு நாட்டின் சிறுபான்மை தலைவர் அலி ஆசிம் கூறுகையில், எந்த ஒரு அண்டை நாட்டையும் நாம் தனிமைப்படுத்தக் கூடாது. மாலத்தீவுக்கு வலிமையான வெளியுறவு கொள்கை தேவை. அதிபர் முய்சுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதிபர் முய்சுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மாலத்தீவு முன்னாள் துணை சபாநாயகர் ஈவா அப்துல்லாவும் பிரதமர் மோடிக்கு எதிரான அந்நாட்டு அமைச்சர்களின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “அமைச்சர்களின் இனவெறி கருத்துக்களை ஏற்க முடியாது. இந்தியா தொடர்பான அமைச்சர்களின் கருத்துக்கள் மாலத்தீவு மக்களின் கருத்து அல்ல. நாம் இந்தியாவைச் சார்ந்துதான் இருந்தோம் என்பது அனைவருக்குமே தெரியும். மாலத்தீவுக்கு இந்தியா தான் முதலில் உதவி செய்து வருகிறது என்றார்.