மோடி ராகுல் வருகை – தமிழகத்தில் அனல் பறக்கும் தேர்தல் களம்

சென்னை: மார்ச் 30:
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல் உள்ளிட்ட தேசிய தலைவர்களும் பிரசாரத்திற்காக தமிழகத்தை நோக்கி வர உள்ளனர். இதனால் வரும் நாட்களில் தேர்தல் களம் அனல் பறக்க தயாராகி வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடக்கிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடந்தது. 1749 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் வேட்புமனு பரிசீலனை நடந்தது. இதில் 1085 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 664 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை இன்று மாலை 3 வரை வரை வாபஸ் பெறலாம். தொடர்ந்து இன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது, எத்தனை பேர் தேர்தல் களத்தில் உள்ளனர் என்ற முழு விவரம் தெரியவரும். அதே நேரத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளன. அதாவது, இன்னும் 19 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால், தலைவர்கள் தமிழகம் முழுவதும் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 22ம் தேதி முதல் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். 22ம் தேதி திருச்சியில் தனது பயணத்தை தொடங்கிய முதல்வர் நாடாளுமன்ற தொகுதி வாரியாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றி வருகிறார். அவரின் பிரசாரத்துக்கு மக்களிடையே நல்ல எழுச்சி ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தான் அமோக வெற்றி பெறும் என்று மக்கள் பேச தொடங்கியுள்ளனர். இதனால், திமுக கூட்டணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். பிரசாரமும் அனல் பறக்க தொடங்கியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தர்மபுரி, கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து இன்று அவர் சேலம், கள்ளக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்கிறார். சென்னையில் வருகிற 17ம் தேதி பிரசாரத்தை நிறைவு செய்கிறார். ஒன்றிய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பாஜ தலைவர்கள் அனைவரும் திணறி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருபுறம் பிரசாரம் செய்து வரும் நிலையில், திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.இதேபோல திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பியும் தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர்கள் தவிர திமுக முன்னணியினரும் பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும், மநீம தலைவர் கமல்ஹாசனும் நேற்று ஈரோட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்கியுள்ளார். அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி வாரியாக பொதுக்கூட்டங்களில் பங்கேற்று அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகளை திரட்டி வருகிறார். மேலும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஒவ்வொரு கட்சிகளின் வேட்பாளர்களும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்குகளை திரட்டி வருகின்றனர். முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியிலும் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்ற கருத்து நிலவி வருகிறது. முதல்கட்ட தேர்தல் என்பது அடுத்து 6 கட்டங்களாக நடைபெற உள்ள மற்ற மாநிலங்களுக்கான தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால் தேசிய தலைவர்களின் கவனம் தமிழகத்தை நோக்கி திரும்பியுள்ளது. இதனால், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே தமிழகத்திற்கு படையெடுப்பதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டிருந்தார். 5 முறை பிரதமர் மோடி தமிழகம் வந்தார்.அப்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய நகரங்களில் நடந்த பாஜ பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினார். ரோடு ஷோவிலும் பங்கேற்றார். இந்நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளார். அதாவது 3 முறை தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்டா பகுதிகள் மற்றும் வேலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஒன்றிய பாஜவில் பிரதமருக்கு அடுத்த நிலையில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வரும் 4, 5ம் தேதி என 2 நாட்கள் பயணமாக தமிழகம் வர உள்ளார். 4ம் தேதி அவர் கோவை, மதுரை, சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜ மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.தொடர்ந்து 5ம் தேதி சென்னையில் உள்ள மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் வினோஜ் பி.செல்வம், தென்சென்னையில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பால்கனகராஜ் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். இது போக ஒன்றியத்தில் இருக்கிற அனைத்து அமைச்சர்களும் தமிழகத்திற்கு பிரசாரம் செய்ய வேண்டும் என்று டெல்லி பாஜ மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அனைத்து ஒன்றிய அமைச்சர்களும் ஒன்றன் பின் ஒன்றாக தமிழகத்தை நோக்கி வரிசையாக படையெடுக்க உள்ளனர். மேலும் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் பிரசாரத்திற்காக தமிழகம் வர உள்ளார்.அதேபோல ராகுல்காந்தியும் அடுத்த வாரம் தமிழகத்திற்கு வர உள்ளார். அவர் திமுக கூட்டணி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். மொத்தம் அவர் 4 இடங்களில் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்தும் அவர் பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார். மாநில தலைவர்கள் ஏற்கனவே தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேசிய தலைவர்களும் பிரசாரத்திற்காக தமிழகத்ைத நோக்கி வர உள்ளதால் தேர்தல் களம் மேலும் விறுவிறுப்படைந்துள்ளது. அந்தந்த கட்சிகளின் தொண்டர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

  • திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 22ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை தொடங்கி, தொகுதி வாரியாக வாக்கு சேகரித்து வருகிறார்.
  • ஒன்றிய அரசு மீது மு.க.ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பாஜ தலைவர்கள் அனைவரும் திணறி வருகின்றனர்.
  • முதல்கட்ட தேர்தல் என்பது அடுத்து 6 கட்டங்களாக நடைபெற உள்ள மற்ற மாநில தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால் தேசிய தலைவர்களின் கவனம் தமிழகம் நோக்கி திரும்பியுள்ளது.