மோடி 11 நாள் கடும் விரதம்

அயோத்தி,ஜன.12-
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி கடும் விரதம் தொடங்கி உள்ளார். தொடர்ந்து 11 நாட்கள் அவர் விரதம் இருந்து சிறப்பு பூஜைகள் செய்கிறார். இன்று அவர் விரதம் தொடங்கினார்.
அயோத்தி ராமர்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பிரதமர் மோடி சிறப்பு ஆடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோ பதிவில் ‘ராம், ராம்’ என துவக்கி தொடர்ந்து அவர் பேசியதாவது: “வரும் 22ம் தேதி நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்க கே உள்ளது. இந்த புனித நிகழ்வில் நான் பங்கேற்பது பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இன்று முதல் 11 நாட்கள் விரதம் துவக்கி உள்ளேன். உணர்வுப்பூர்வமாக புதிய சக்தியை பெறுகிறேன். நான் இதுபோன்ற ஒரு உணர்வை இதற்கு முன்பு அடைந்ததில்லை.ராம பக்தர்கள் என்னை ஆசீர்வதிக்கவேண்டும். இது நாட்டு மக்களின் விழா இந்த விழாவில் நான் பங்கேற்கவும்
அனைவரையும் முன்னிலைப்படுத்தவும்
கடவுள் என்னை படைத்துள்ளார். சுவாமி விவேகானந்தர், சத்ரபதிசிவாஜி ஆகியோரை நினைவுகூர்கிறேன். ஆன்மிகம், நமது கலாசாரத்தை உலக அளவில் புகழை பெற்றுதந்த விவேகானந்தரின் பிறந்த நாள் இன்று. அவரை நினைக்கும் போது ஒரு உத்வேகம் பிறக்கிறது. அவரது ஆற்றலும், உற்சாகமும் இளைஞர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமைகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம்” என உரையை முடித்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இன்னும் 11 நாட்கள்தான் இருக்கின்றன. கும்பாபிஷேகம் நிகழும் நன்நாளில் இந்திய மக்களின் பிரதிநிதியாக கலந்துகொள்ள கடவுள் என்னைப் படைத்துள்ளார். இதை மனதில் கொண்டு நான் 11 நாட்கள் சிறப்புப் பூஜையை இன்று (ஜன.12) தொடங்குகிறேன். மிகவும் புனிதமான, வரலாற்று சிறப்புமிக்க கும்பாபிஷேக நிகழ்வைக் காண நான் பாக்கியம் செய்துள்ளேன். முதன்முறையாக நான் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறேன். இந்த 11 நாட்கள் பூஜைக்காக மக்களின் ஆசியைக் கோருகிறேன்” எனப் பேசியுள்ளார். பிரதமர் மோடி கும்பாபிஷேக நெறிமுறைகளின்படி பூஜைகள் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வ குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.