மோட்டார்சைக்கிளில் சென்ற தாய்-மகன் மீது மிளகாய் பொடி தூவி பணம் கொள்ளை

தண்டராம்பட்டு, ஜன.13-
தண்டராம்பட்டு அருகே பட்டப்பகலில் மோட்டார்சைக்கிளில் சென்ற தாய் -மகன் மீது மிளகாய் பொடியை தூவி 4 பேர் கொண்ட கும்பல் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
திருவண்ணாமலை பேகோபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன், லாரி டிரைவர். இவரது மனைவி சத்யா (வயது 42). இ-சேவை மையங்களுக்கு சென்று சேவை கட்டணங்களை வசூல் செய்யும் பணி செய்து வருகிறார். வழக்கம் போல இவரது மகன் கல்லூரி மாணவரான சஞ்சய் (21) என்பவரை அழைத்துக் கொண்டு நேற்று காலை மோட்டார் சைக்கிளில் தண்டராம்பட்டு இ-சேவை மையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு ரூ.4,600 வசூல் செய்து கொண்டு 11 மணி அளவில் திருவண்ணாமலைக்கு திரும்பி வந்துள்ளனர். ராதாபுரம் காட்டுப் பகுதியில் வந்தபோது, இவர்களை பின்தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிளில் 4 பேர் ஹெல்மெட் அணிந்து வந்துள்ளனர். அவர்கள் சத்யா, சஞ்சய் ஆகியோர் மீது மிளகாய் பொடியை தூவி உள்ளனர்.
இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். உடனே அந்த கும்பல் சத்யாவின் கையில் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பி தலைமறைவாகி விட்டனர்.
இதில் அதிர்ச்சி அடைந்த தாய்- மகன் இருவரும் தண்டராம்பட்டு போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தனர். துணைபோலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை தேடிவருகின்றனர்.