மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விபத்து – காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்

வாணியம்பாடி, ஜன.13-
வாணியம்பாடி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அமைச்சர் கே.சி.வீரமணி அனுப்பி வைத்தார்.
நாட்டறம்பள்ளி அருகே உள்ள கே.பந்தரபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70), விவசாயி. இவர் தனது மனைவி தனலட்சுமியை (65) அழைத்துக்கொண்டு, வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்தார்.
சிகிச்சை முடிந்து நேற்று மதியம் நாட்டறம்பள்ளியை நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். புத்துக்கோவில் பகுதியில் சென்றபோது, அந்த வழியாக பின்னால் சென்னையில் இருந்து பெங்களூருவை நோக்கி வந்த ஒரு கார் திடீரென அவரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் அவரும், மனைவியும் படுகாயம் அடைந்தனர்.
அந்த நேரத்தில் வாணியம்பாடியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நாட்டறம்பள்ளியை நோக்கி சென்ற அமைச்சர் கே.சி.வீரமணி சென்று கொண்டிருந்தார். விபத்து நிகழ்ந்ததை பார்த்த அமைச்சர் கே.சி.வீரமணி தனது காரை நிறுத்தி கீழே இறங்கினார். பின்னர் ஆம்புலன்சை வரவழைத்து காயம் அடைந்த தம்பதியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விபத்து குறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் கிரண் (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.