மோட்டார் சைக்கிளில் வீலிங்இளம் பெண் சாவு 2 பேர் காயம்

பெங்களூர் : ஆகஸ்ட். 17 – மோட்டார் சைக்கிளில் ஜாலி ரைட் சென்றிருந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் மோட்டார் சைக்கிளில் சாகசங்கள் (வீலிங்க் ) செய்த போது நிலைதடுமாறி விழுந்ததில் இளம் பெண் ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்திருப்பதுடன் மேலும் இரண்டு பேர் படு காயங்களடைந்துள்ள துயர சம்பவம் ஹொசகோட்டே தாலூகாவின் மைலாபுரா சென்னாபுரா கேட் அருகில் நடந்துள்ளது. நகரின் கல்லூரி மாணவ மாணவிகள் கும்பல் சுமார் 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் கோலாரில் உள்ள காபி டே மார்கமாக ஜாலி ரைட் சென்றிருந்தனர். பின்னால் இளம் பெண் உட்கார்ந்திருந்த மோட்டார் சைக்கிளில் அதன் ஓட்டுநர் சாகசம் செய்ய முயன்ற போது முன்னாள் சென்றுகொண்டிருந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் இருந்த மூன்று பேரும் வீதியில் விழுந்துள்ளனர் . கீழே விழுந்த ஒரு இளம்பெண்ணின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்த சோகையுடன் அவர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். இறந்த இளம்பெண்ணின் அடையாளம் தெரியவில்லை. மேலும் இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு பேர் ஹொசகோட்டேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து நடந்த உடனேயே உடன் வந்திருந்த மற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் தங்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது போல் தங்கள் மோட்டார் சைக்கிள்களுடன் தப்பியோடியுள்ளனர். இந்த கொடூர விபத்து குறித்து தகவல் அறிந்த ஹொசகோட்டே போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்தை பரிசீலனை செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.