
பெங்களூர் : மார்ச். 4 – போலி சாவிகளை பயன்படுத்தியும் ஹாண்டல் பூட்டுகளை உடைத்தும் பைக்குகளை திருடி அவற்றை அடிமாட்டு விலைக்கு விற்று வந்த பிரபல திருடன் ஒருவனை சித்தாபுரா போலீசார் கைது செய்துள்ளனர். சித்தாப்புராவை சேர்ந்த நிதின் (20) கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியாவான். இவனிடமிருந்த 6 லட்சம் ருபாய் மதிப்புள்ள ஹோண்டா டியோ , பல்சர் , ஆர் எஸ் பைக்குகள் உட்பட மொத்தம் 12 இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.வீடுகளின் எதிரில் மற்றும் வாகன நிறுத்தங்களில் நின்றிருக்கும் வாகனங்களை திருடி அவற்றை குறைந்த விலைக்கு விற்று வந்துள்ளான். குற்றவாளி நிதினுக்கு எதிராக ஏற்கெனவே நகரின் பல்வேறு பகுதிகளில் புகார்கள் பதிவாகியுள்ளன. நகரின் சித்தாப்புரா , கலாசிபாளையம் , வர்த்தூர் , சந்திரா லே அவுட் , கே எஸ் லே அவுட் உட்பட மொத்தம் 12 இடங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளது. சித்தாப்புரா அருகில் நடந்த வாகன திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் நம்பகமான தகவல்களின் பேரில் குற்றவாளி நிதினை கைது செய்துள்ளனர்.இதே வேளையில் ஹாவேரி மாவட்டத்தின் பியாடகி தாலூக்காவின் காலபூஜே என்ற கிராமத்தில் குடிசைக்கு தற்செயலாக தீ பிடித்ததில் அங்கிருந்த ஆடுகளுடன் சேர்ந்து சன்னதம்மாப்பா (60) என்பவர் இறந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆடுகளை வைத்திருந்த தொழுவத்தில் சன்னதம்மாப்பா தனியாக உறங்கிகொண்டிருந்த நேரத்தில் அசம்பாவிதமாக குடிசையில் தீ பற்றியுள்ளது. இந்த தீ விபத்தில் மொத்த குடிசையும் எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடனேயே பியாடகி போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.