யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

அரியானா, ஆகஸ்ட் 23- அரியானா மாநிலத்தில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் கடந்த மாதம் 31-ந்தேதி பேரணி நடைபெற்றது. அப்போது சிலர் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதன்பின் மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இதில் ஆறுபேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக யாத்திரை பாதிலேயே நிறுத்தப்பட்டது. சுமார் இரண்டு மூன்று வாரங்களுக்குப்பின் நூ மாவட்டத்தில் முழுவதுமாக அமைதி திரும்பியது. இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி விஷ்வ இந்து பரிஷத்தின் பிரிஜ் மண்டல ஜலாபிஷேக யாத்திரைக்கு அனுமதி கேட்டு நூ நிர்வாகத்திற்கு விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக, நூ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூ எஸ்.பி. நரேந்தர் பிஜார்னியா, அனுமதி கேட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து உள்ளூர் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் தேவேந்தர் சிங் கூறுகையில் ‘’எனக்கு இதுகுறித்து எந்த தகவலும் கிடைகக்வில்லை. அங்கே, யாத்திரைக்கு எந்தவிதமான அனுமதியும் தேவையில்லை’’ என்றார். நூ-வின் நல்ஹார் கோவிலில் இருந்து பிரோஜ்புர் ஜில்காருடைய ஜிர் மற்றும் ஷிங்கார் கோவில் வழியாக யாத்திரையை மீண்டும் தொடங்க கடந்த 13-ந்தேதி மகாபஞ்சாயத்தில் முடிவு எடுக்கப்பட்டது.