யாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி 5 பேர் பலி

லக்னோ, ஜூலை. 23 – உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் கன்வார் புனித யாத்திரைக்காக நடந்து சென்ற பக்தர்கள் மீது ஒரு லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர விபத்து இன்று அதிகாலை 20.15 மணியளவில் நிகழ்ந்தது. வடமாநிலங்களில் கன்வார் புனித யாத்திரை ஒவ்வொரு வருடமும் இந்து மாதமான சிராவண மாதத்தில் நடைபெறும். இந்த யாத்திரையின் போது, சிவபக்தர்கள், புனிதமான கங்கை நதியின் நீரைப் எடுத்து வருவதற்காக உத்தரகாண்டில் உள்ள ஹரித்வார், கவுமுக் போன்ற புனிதத்தலங்களிற்கு நடந்து செல்கிறார்கள். பின்னர் அந்த நீரை தங்கள் இருப்பிடங்களுக்கு கொண்டு வந்து இறைவனுக்கு படைப்பது வழக்கம். மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியரை சேர்ந்த 7 கன்வார் பக்தர்கள் தங்கள் யாத்திரையை முடித்துவிட்டு, உத்தரகாண்டில் உள்ள ஹரித்வாரிலிருந்து குவாலியர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக, அவர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. டிரைவர் குறித்த தகவல் கிடைத்துள்ளது, அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.