யானை தாக்கியதில் காபி விவசாயி பலி

குடகு, மார்ச் 23: யானைத் தாக்கியதில் காபி விவசாயி பலியான சோக சம்பவம் இன்று காலை நடந்துள்ளது.
மடிக்கேரி தாலுகா நாலடி கிராமத்தைச் சேர்ந்த காபி விவசாயி கம்பேயண்ட ராஜா தேவய்யா (59) உயிரிழந்துள்ளார்.
காலையில் எழுந்து வீட்டின் அருகே உள்ள தனது காபி தோட்டத்திற்கு சென்றபோது காட்டு யானை ஒன்று அங்கு பதுங்கியிருந்து உள்ளது. யானை இருப்ப‌தற்கான எந்த தடயமும் இல்லாததால் அந்த வழியில் தேவய்யா செல்லும்போது யானை தாக்கி உள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர். குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தகவலறிந்த‌ வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகின்றனர்.மாவட்டத்தில் யானைகள் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன், காபி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் யானை தாக்கி உயிரிழந்தார்.குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுக்கா செனங்கி அருகே உள்ள அப்பூர் கிராமத்தின் காபி தோட்டத்துக்குள் புகுந்த யானை அஜாபானு (37) என்ற அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை தாக்கியது. இதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தையடுத்து தோட்ட தொழிலாளர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.