யானை தாக்கி விவசாயி படுகாயம்

பெங்களூரு, மே 30:
பன்னர்கட்டா ஹக்கிபிக்கி காலனி அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலத்த காயம் அடைந்தார்.
ஹக்கிபிக்கி காலனியை சேர்ந்த விவசாயி சின்னபாரியப்பா (70) யானை தாக்கி விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விவசாயி சின்னபாரியப்பா பண்ணையை நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​திடீரென காட்டுயானை தாக்கியது. இதனால் கை, இடுப்பு எலும்புகள் உடைந்து பலத்த காயம் அடைந்தார். காயத்துடன் கிடந்த சின்னபாரியப்பாவை அப்பகுதி மக்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காயமடைந்த விவசாயியை விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்தை பன்னர்கட்டா தேசிய பூங்கா வனத்துறையினர் பார்வையிட்டு சோதனை செய்தனர்.
மின்சாரம் தாக்கி யானை மரணம்;
தமிழக எல்லையான தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலத்தோட்டனப்பள்ளி கிராமத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த யானை ஒன்று உயிரிழந்தது.
நேற்று இரவு காட்டிலிருந்து வந்த யானைக் கூட்டம் கிராமத்திற்குள் புகுந்தது. மலைச்சரிவு பகுதியில் சென்றபோது, ​​அறுந்து கிடந்த மின் கம்பியை யானை ஒன்று மிதித்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே யானை இறந்தது. இது குறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் யானையின் உடலை பார்வையிட்டு, பிரேத பரிசோதனைக்காக யானையின் உடலை அனுப்பி வைத்தனர்.