யார் இந்த மத்வி ஹித்மா? சத்தீஸ்கரில் தவிப்பு


ராய்பூர், ஏப். 8- சத்தீஸ்கரில் சமீபத்தில் நடந்த நக்சல்களின் தாக்குதலில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதனால் நக்சல் தலைவர் மத்வி ஹித்மா மீண்டும் பரபரப்பில் சிக்கியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் பிரச்னை அதிகமாக உள்ளது. இங்குள்ள பாஸ்டர் வனப் பகுதியில் சமீபத்தில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சல்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 22 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதனால் இப்பகுதியில் நக்சல்களின் தலைவராக செயல்படும் மத்வி ஹித்மா மீது அனைவரது கவனமும் திரும்பி உள்ளது.
பல ஆண்டுகளாக பாதுகாப்பு படையினரால் தேடப்படும் நக்சல் பிரிவின் முக்கிய தலைவராக மத்வி ஹித்மா உள்ளார். ஆனால் அவர் எப்படி இருப்பார் அவரது வயது என்ன என்பதுகூட பாதுகாப்பு படையினருக்கு உறுதியாக தெரியாது. இவரது வயது 45 இருக்கலாம் என மதிப்பிடும் அதிகாரிகள் பல ஆண்டுகளுக்கு முன் எடுத்த அவரது புகைப்படங்களை மட்டுமே கையில் வைத்துள்ளனர்.
அவற்றின் உதவியுடன் மத்வியை பிடிக்க முடியாததால் அவரது தலைக்கு மாநில அரசு 40 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. நக்சல்கள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தும்போதெல்லாம் மத்வியை தேடும் பணிகளை பாதுகாப்பு படையினர் முடுக்கி விடுவர். இதன்படி தற்போது மீண்டும் மத்வி ஹித்மா பரபரப்பில் சிக்கியுள்ளார்.