யூடியூபர்’களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி, செப்.28-
பிரதமர் மோடி நேற்று சுமார் 5 ஆயிரம் ‘யூடியூபர்’கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், ‘தேசத்தை தட்டி எழுப்புங்கள், ஒரு இயக்கத்தை உருவாக்குங்கள்’ என அறைகூவல் விடுத்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நாம் ஒன்றாக சேர்ந்து, கோடிக்கணக்கான மக்களுக்கு முக்கியமான விஷயங்களை எளிதாக கற்பிக்கவும், புரிய வைக்கவும் முடியும். எனது சேனலில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இருந்தாலும், தேர்வு மன அழுத்தம், எதிர்பார்ப்பு மேலாண்மை, உற்பத்தித்திறன் போன்ற தலைப்புகளில் யூடியூப் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களிடம் பேசியது எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது’ என தெரிவித்தார்.
தூய்மை திட்டம், டிஜிட்டல் பரிவர்த்தனை போன்ற தலைப்புகளில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கூறிய பிரதமர் மோடி, ‘யூடியூபர்’களின் கருத்துகள் மக்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார்.