ரயிலில் சிக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நஷ்டஈடு

புதுடெல்லி:டிச. 21: டெல்லி இந்திரலோக் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த 14-ம் தேதி இளம்பெண் ரீனா என்பவர் ரயிலில் ஏறி சில விநாடிகளில் இறங்கினார். அதற்குள் ரயில் பெட்டி கதவு மூடியதில் அவரது சேலை சிக்கி நடைமேடையில் இழுத்துச் செல்லப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டார்.
சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். அவருக்கு 13 வயதில் மகள், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணவர் இறந்துவிட்டதால் காய்கறி வியாபாரம் செய்து குழந்தைகளை காப்பாற்றி வந்துள்ளார் ரீனா. இதுகுறித்து டெல்லி மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையரகம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. டெல்லி மெட்ரோ நிர்வாகம் நேற்று கூறியிருப்பதாவது:
டெல்லி மெட்ரோ ரயில்வே (நிவாரணம் பெறும் முறை) சட்டம், 2017-ன்படி, விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், மனிதாபிமான அடிப்படையில் கூடுதலாக ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.15 லட்சம் நிவராணம் வழங்கப்படும். ரீனாவின் குழந்தைகள் மைனராக இருப்பதால், நிவாரண தொகையை சட்டப்படி அவர்களிடம் ஒப்படைப்பது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அத்துடன், ரீனாவில் 2 குழந்தைகளின் படிப்பு செலவையும் டெல்லி மெட்ரோ நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும். இவ்வாறு டெல்லி மெட்ரோ நிர்வாகம் தொிவித்துள்ளது.