
கோலார், செப். 1: கவுரிபித்தனூர் ரயில்நிலைய நடைமேடையில் இரட்டைக் குழந்தைகளைப் 21 வயது பெண் ஒருவர் பெற்றெடுத்தார்.
21 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் பெங்களூரு-நாந்தேட் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, கவுரிபித்தனூர் ரயில்நிலைய நடைமேடையில் வியாழக்கிழமை அதிகாலை 1.40 மணியளவில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார்.
இது குறித்து கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் குசுமா ஹரிபிரசாத் கூறியது:கலபுர்கி மாவட்டம் சித்தாப்பூரைச் சேர்ந்த சந்திரம்மா பெங்களூரில் வசித்து வருகிறார்.
இவரும், இவரது தாயும் பெங்களூரில் இருந்து சித்தப்பூருக்கு செல்வதற்காக டிக்கெட் வாங்கியுள்ளனர்.
ரயில் தொட்டபள்ளாபுரா ரயில் நிலையத்தை அடைந்ததும், சந்திரம்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, சக பயணிகள் இந்த விஷயத்தை ரயில்வே போலீஸ் அதிகாரியான நடராஜ் கவனத்திற்குக் கொண்டு வந்தவுடன், ரயில் சில நிமிடங்களில் கவுரிபித்தனூர் நிலையத்தை அடையும் என்று அவர்களிடம் கூறினார். அவர்கள் உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு அம்புலன்ஸை அழைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
சந்திரம்மா கவுரிபிதனூர் நிலையம் வரை காத்திருந்த நாகபூஷன், அங்கு ஆம்புலன்ஸ் ஒன்றை விரைந்து வருமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். 8 மாத கர்ப்பம் நிறைவு பெற்றிருந்த நிலையில், சந்திரம்மாவிற்கு இன்னும் பதினைந்து நாட்களில் பிரசவம் ஆவதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனராம். கவுரிபித்தனூரில், சந்திரம்மா இறங்கி ஆம்புலன்சுக்காகக் காத்திருந்தார்.
அப்போது அவருக்கு வலி அதிகமாகி, நடைமேடை எண் இரண்டில், பெண் பயணிகளின் உதவியுடன், அவர் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
பிரசவம் ஆன சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்து கௌரிபிதனூரில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ரயில்வே ஊழியர்கள் மஞ்சுளா, பாயின்ட்ஸ்மேன் ரவி உள்ளிட்டோர் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு உதவியதாக கவுரிபிதனூர் ஸ்டேஷன் மாஸ்டர் சீனிவாச ராவ் தெரிவித்தார்.
கொத்தனாரான சந்திரம்மாவின் கணவர் குபேர், தகவல் அறிந்த உடன் கவுரிபிதனூரில் உள்ள தாய் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு விரைந்தார். பிறந்த இரட்டை குழந்தைகளின் எடை 2.3 கிலோ மற்றும் 2.5 கிலோ உள்ளதாக மருத்துவர் குபேரிடம் தெரிவித்தார். மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி லட்சுமிகாந்த், தாயும், குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகவும், இரண்டொரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.