ரயில் நிலையங்களுக்கு சான்றிதழ்

சென்னை: ,டிச.26
ஆரோக்கியமான மற்றும் தூய்மையான உணவு வழங்கி வரும் தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் உட்பட 6 ரயில் நிலையங்களுக்கு ஈட் ரைட் நிலையம் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.நல்ல தரமான, ஆரோக்கியமான உணவு வழங்கும் நிலையங்களை ஆய்வு செய்து, தேர்ந்தெடுத்து சான்றிதழ்களை வழங்குவது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிறுவனம் (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ) தலைமையிலான ஈட் ரைட் நிலையம் இயக்கத்தின் ஒரு முன்முயற்சியாகும்.
இந்த முயற்சியின் கீழ், ரயில்வே நிலையங்களில் சுகாதாரமான, சத்தான மற்றும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்வது முதன்மை நோக்கமாகும். ஸ்டால்கள் உட்பட நிலையங்களுக்குள் உள்ள கேட்டரிங் நிறுவனங்களை உள்ளடக்கிய உணவுகளை கையாளுதல் மற்றும் தயாரிப்பதலில் பாதுகாப்பான நடைமுறைகளை செயல்படுத்துவதற்கு சான்றிதழ் உத்தரவாதம் அளிக்கிறது.
சான்றிதழைப் பெற நிலையங்களில் தண்ணீரின் தரம், தூய்மை, சுகாதாரம், பூச்சி கட்டுப்பாடு, பதிவேடு பராமரிப்பு மற்றும் உணவுப் பொருள் ஆய்வு ஆகியவற்றின் கீழ் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இதன் அடிப்படையில், சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, திருச்சூர், கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட 6 ரயில் நிலையங்களுக்கும், திருச்சி பல்துறை மண்டல பயிற்சி நிறுவனத்துக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.