ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை எப்போது?

பெங்களூரு, ஆக. 30: ராஜனகுன்டே ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைப்பது எப்போது என்ற கேள்வியை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எழுப்புகின்றனர். நகரும் சரக்கு ரயிலுக்கு அடியில் சிக்கி பெண் இறந்த சம்பவத்திலிருந்து மக்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிப்பவர்கள் ரயில்வே அதிகாரிகள் அளித்த உள்கட்டமைப்பு உத்தரவாதங்களை நினைவூட்டுகிறார்கள். கொப்பலைச் சேர்ந்த 27 வயது, கணவனை இழந்த‌ ஜோதி, தனது மாமியாருடன், கடந்த வாரம் பெங்களூருவுக்கு வந்துள்ளார். பெங்களூரு வந்த அவர்கள் ராஜன்குண்டே ஆதிகனஹள்ளியில் உள்ள‌ உறவினர் வீட்டில் தங்கச் சென்றுள்ளனர். ராஜன்குண்டே ரயில் நிலையத்தில் சரக்கு ரயில், நடை பாதையை மறித்து நின்றதையடுத்து, ஜோதி சரக்கு ரயிலின் அடியில் சென்று தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது சரக்கு ரயில் திடீரென நகர ஆரம்பித்தது. இதனையடுத்து, ஜோதி தண்டவாளத்தின் இடையே படுத்துள்ளார். இதில் காயமடைந்த ஜோதி, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரம் நான் பாதித்ததைப் போல‌ வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது. ராஜனகுன்டே ரயில் பாதையின் மறுபுறம் செல்ல மக்கள் ர‌யில்களுக்கு அடியில் செல்ல வேண்டிய இடத்தில், 2 காவலர்களை நியமிக்க ரயில்வே அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார் ஜோதி. இதற்கிடையில், பார்வதிபுரா மற்றும் அடிகனஹள்ளி பகுதிவாசிகள் இதுபோன்ற ஒரு சம்பவத்திற்கு ரயில்வே அதிகாரிகள் மற்றும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டை சுமத்துகின்ற‌னர். ரயில் பாதையின் மறுபுறம் மக்கள் செல்வதற்கு வசதியாக சுரங்கப்பாதை அல்லது நடை மேல்பாலம் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதால் அவர்கள் விரக்தியடைந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகளிடம் உறுதி அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர். ரயில்வே நிலையத்தில் ரயில்வே அதிகாரிகள், நடை மேல்பாலம் கட்டினால், இரவில் அதை பயன்படுத்துவதற்கு பாதுகாப்பில்லை என தெரிவித்தனர். அதிக அளவில் மக்கள் ரயில் பாதையை கடக்கும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்யவில்லை. பெண்கள் நடை மேம்பாலத்தை பயன்படுத்துவது பாதுகாப்பற்றது. ரயில்வே பிளாட்பாரம் போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் மர்மநபர்களின் இருப்பிடமாக மாறியுள்ளது. பாதசாரிகளிடமிருந்து மொபைல் போன்கள் மற்றும் பணம், நகையை கொள்ளையடிக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன என்று பெயர் தெரிவிக்க விரும்பாத நபர் ஒருவர் தெரிவித்தார். தென்மேற்கு ரயில்வேயின் துணைத் தலைமைப் பொறியாளர் (பாலம் கட்டுமானம்) 2019 ஆம் ஆண்டு டிச. 6 ஆம் தேதி பஞ்சாயத்து ராஜ் இன்ஜினியரிங் துறையின் தலைமைப் பொறியாளருக்கு ரயில் பாதையில் திறந்திருக்கும் வடிகால் மாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கடிதம் எழுதியுள்ளார். மின்மாற்றி மற்றும் கேபிள்கள், நீர் குழாய்கள், கழிவுநீர் குழாய்கள் மற்றும் நடை சுரங்கப்பாதை அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளன. ஆனால் இன்றுவரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது வேதனைக்குரியது