ரவுடி காதலியின்பங்களாவுக்கு சீல்

நொய்டா:ஜனவரி. 7 – உ.பி.யின் நொய்டாவின் பிரபலரவுடி ரவி கண்ணாவும் அவரதுகூட்டாளிகளும் தன்னை கூட்டுப்பலாத்காரம் செய்ததாக சில தினங்களுக்கு முன்பு 25 வயது பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து ரவி கண்ணாவை தேடும் பணியில் நொய்டா போலீஸார் இறங்கினர். அதன் தொடர்ச்சியாக, ரவுடி ரவி கண்ணா மற்றும்அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை போலீஸார் முடக்கினர்.
இந்நிலையில் ரவுடி ரவி கண்ணா காதலி காஜல் ஜாவுக்கு சொந்தமான ரூ.70 கோடி மதிப்புள்ள பங்களாவுக்கு போலீஸார் சீல் வைத்துள்ளனர். நொய்டா பிராந்தியத்தில் ரவி கண்ணா மிகவும் பிரபலமான ரவுடி. பழைய இரும்புகளை கடத்தி விற்பனை செய்வது அவரது கும்பலின் தொழில். முன்னதாக, இந்த கும்பலுக்கு ரவி கண்ணாவின் சகோதரர் ஹரேந்திர பிரதான் தலைவராக இருந்தார். 2015-ல் அவர் கொல்லப்பட்டதையடுத்து கும்பலுக்கு தலைவராக பொறுப்பேற்றார் ரவி கண்ணா. 16 ரவுடிகள் அடங்கிய அந்தக் குழு, நொய்டாவில் கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல், சட்டவிரோத கடத்தல் என செயல்பட்டு வந்தது. இதற்கு காவல் துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த புதன் கிழமை காஜல் ஜாவுக்கு சொந்தமான ரூ.70 கோடி மதிப்புள்ள பங்களாவில் போலீஸார் சோதனை நடத்தினர். இந்தத் தகவல் தெரிந்து காஜல் ஜா அங்கிருந்து தப்பிவிட்டார். இதையடுத்து அந்தப் பங்களாவுக்கு போலீஸார் சீல் வைத்தனர்.