ரஷிய மக்கள் புதினை எதிர்த்து போராட வேண்டும்

கீவ்: செப். 23 –
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா தனது தாக்குதலை தொடங்கியது. போர் தொடங்கி 8 மாதங்கள் ஆகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷிய வீரர்களை எதிர்த்து உக்ரைன் படையினரும் அசராமல் போரிட்டு வருவதால் போர் இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது. பல்வேறு நகரங்களை ரஷியா கைப்பற்றிய போதும் தற்போது அந்த நகரங்கள் ஒவ்வொன்றாக உக்ரைன் மீட்டு வருகிறது. இதனால் உக்ரைனை பிடிக்கும் ரஷியாவின் முயற்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. உக்ரைனுக்கு மேற்கு நாடுகள் ஆயுத உதவி செய்து வருவதால் அந்நாடுகள் மீது ரஷியா கடும் கோபத்தில் உள்ளது. இந்தநிலையில் உக்ரைனை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்ற உத்வேகத்தில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற 3 லட்சம் வீரர்களை உடனே பணிக்கு திரும்பு மாறு ரஷியா அறிவித்து உள்ளது.இந்த உத்தரவு பொது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்கள் கடந்த 2 நாட்களாக வீதிகளில் இறங்கி பேரணி, ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட னர். இதையடுத்து போராட்டம் நடத்திய 1,300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த புதிய உத்தரவால் பீதியடைந்த முன்னாள் படை வீரர்கள் நாடுகளை விட்டு வெளியேற முடிவு செய்து விமான நிலையங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் விமான நிலையங்களில் கடும் கூட்டம் அலைமோதுகிறது.