ரஷ்யா – உக்ரைன் போரில் 2வது இந்தியர் உயிரிழப்பு

புதுடெல்லி, மார்ச் 7: ரஷ்யா – உக்ரைன் போரில் மேலும் ஒரு இந்தியர் உயிரிழந்துள்ளார். மேலும் தெலுங்கானாவை சேர்ந்த முகமது அஸ்பான் என்பவர் உக்ரைன் ஆளில்லா விமான தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலை தேடி ரஷ்யா சென்ற இந்திய இளைஞர்கள், அங்குள்ள அதிகாரிகளால் ராணுவத்தில் சேர்க்கப்படுவதால், இந்திய இளைஞர்கள் உயிரிழக்கின்றனர். இதேபோல் தெலுங்கானாவை சேர்ந்த முகமது அஸ்பான் (வயது 30) என்ற இளைஞர் வேலை தேடி ரஷ்யா சென்றிருந்தார். ஆனால், ரஷ்ய ராணுவத்தின் வாக்னர் குழுவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி அவரைச் சேர்த்ததாக கூறப்படுகிறது. இப்போது அவர் அங்கு நடந்த போரில் உயிரிழந்துள்ளார். முகமது அஸ்பானின் மரணம் குறித்து ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்தது.
இந்தியாவைச் சேர்ந்த முகமது அஸ்ஃபானின் மரணம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் ரஷ்ய அதிகாரிகள் மற்றும் முகமது அஸ்பானின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம். முகமது அஸ்பானின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.சில நாட்களுக்கு முன்பு முகமது அஸ்பான் ரஷ்யாவில் சிக்கலில் உள்ளதால் அவருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு அவரது குடும்பத்தினர் மத்திய அரசிடம் முறையிட்டனர். ரஷ்யாவுக்கு வேலைக்குச் சென்ற முகமது அஸ்பான், ராணுவத்தில் சேர்க்கப் பட்டார். அவர் துயரத்தில் உள்ளதாகவும், அவரை காப்பாற்றுமாறு குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்திருந்த‌னர். இந்திய வெளியுறவு அமைச்சகமும் இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்திருந்தது. என்றாலும் அஸ்பான் போரில் இறந்துள்ளார்.அஸ்பானின் மரணம் ரஷ்யாவில் 2வது இந்தியர் மரணம். சில நாட்களுக்கு முன்பு, ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். ஆதாரங்களின்படி, ரஷ்யா மற்றும் உக்ரைன் எல்லையில் நடந்த இந்த தாக்குதலில் 23 வயது இந்திய இளைஞர் ஒருவர் இறந்தார். உயிரிழந்தவர் குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த ஹெமில் அஷ்வின்பாய் மங்குகியா என அடையாளம் காணப்பட்டார். அவர் டிசம்பர் 2023 இல் ரஷ்ய ராணுவத்தில் உதவியாளராக சேர்ந்தார். அவர் ராணுவ ஏஜென்டாக பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவில் உள்ள இலக்குகள் மீது உக்ரைன் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் பல இந்தியர்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.